புதன், 6 பிப்ரவரி, 2019

சாதிக்குமா தன்னாட்சி கூட்டணி?

[கோகுலம் கதிர் பிப்ரவரி மாத இதழில் சாதிக்குமா தன்னாட்சி கூட்டணி? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

தேர்தல் வரும்போதெல்லாம் விதவிதமான பல சுவாரசியங்களை அரசியல் களத்தில் காண முடியும். அப்படியான ஒரு நிகழ்வு தான் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ மாநாடு.


லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருக்க, 20க்கும் மேற்பட்ட தேசிய, மாநில கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களின் பங்கேற்பில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜீ ஒருங்கிணைப்பில், இந்தியாவின் கிழக்கு வாசலில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட சங்கமம் அது. ஒரு முன்னாள் பிரதமர், மூன்று முதலமைச்சர்கள், மூன்று முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் போன்ற இளம் தலைவர்கள், காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது, பாஜகவைச் சேர்ந்த முதுபெரும் தலைவர்களான அருண் ஷோரி மற்றும் யஸ்வந்த் சின்ஹா, பாராளுமன்ற உறுப்பினர் சத்ருக்கன் சின்ஹா ஆகியோரும் எதிர்கட்சியினரோடு கைகோர்த்து நின்றது அரசியல் அரங்கில் சற்று வியப்புக்குரியதே.

ஒவ்வொரு தலைவர்களும், பணமதிப்பிழப்பு, மதவாதம், விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பு, மாநிலங்கள் உரிமை, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு, வாக்கு இயந்திரம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பாஜகவையும் பிரதமர் மோடியையும் சாடினர். குறிப்பாக இம்மாதிரியான கூட்டணி அரசியலில் அனுபவம் வாய்ந்த தேவகௌடா, சரத் பவார், சரத் யாதவ், யஸ்வந்த் சின்ஹா போன்றோர் கூட்டணியின் நோக்கமும் அதற்கான அணுகுமுறையும் முன்வைத்தனர். பாஜகவுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் ஓரணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே அனைவரது சாராம்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள தனிப்பெரும்பான்மை அரசை வீழ்த்துவது ‘மகாகத்பந்தன்’ என்றழைக்கப்படும் மெகா கூட்டணி மூலமே சாத்தியம் என்பதை அவர்களது பேச்சு வெளிப்படுத்தியது.

இந்திய அரசியலில் மெகா கூட்டணிகள் ஒன்றும் புதுமையானவை அல்ல. வலிமையான இந்திரா காங்கிரசை வீழ்த்த 1977-ல் உதயமான ஜனதா கூட்டணி துவங்கி தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி போட்டு ஆளுங்கட்சியை தோற்கடிக்கும் உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு, பிரதான தேசிய கட்சிகளே மாநில அளவிலான கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. சில சமயங்களில் பெரும்பான்மை இலக்கை எட்டுவதற்காக, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் கூட உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 1991-ல் வலுவான தேசிய கட்சியாக பாரதீய ஜனதா உருவெடுத்த பின்னர், காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளை ஒட்டிய கூட்டணிகளாக உருவாகி, இருகட்சி தேர்தல்முறைப் போலானது. இடையில் இரண்டு முறை மூன்றாம் அணிகள் ஆட்சியமைத்தாலும் அவை காங்கிரஸ் அல்லது பாஜகவின் துணையுடன் அமைந்த நிலையற்ற ஆட்சியாகவே அமைந்தது.

அரசியல் சாசனப்படி இந்தியாவில் பலகட்சி ஆட்சிமுறை தான் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலும் ஏதேனும் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே நடைபெறுகிறது. இருப்பினும், பிரதான கட்சிகளை சாராமல் சிறு தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து அமைக்கும் மூன்றாம் அணி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. ஒரே எதிரிகள், ஒரே நோக்கம் உள்ளிட்ட காரணங்களோடு கரம்கோர்க்கும் மூன்றாம் அணிகள் பெரும்பாலும் உருவாகும் முன்னரே உடைந்து போன வரலாறுகள் தான் அதிகம். அதையும் தாண்டி தேர்தலை எதிர்கொண்டு, போதிய ஆதரவுடன் ஆட்சியமைப்பது யாவும் இப்போதும் குதிரைக்கொம்பே. தத்தமது மாநிலங்களில் கூட தனித்து வெல்லும் அளவிற்கு பலம்வாய்ந்த மாநில கட்சிகள் அமைக்கும் இக்கூட்டணிகள் கூட பின்னடைவை சந்திக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், தொகுதி பங்கீடு குழப்பங்கள், நாற்காலி ஆசைகள், முரண்பாடான கொள்கைகள், வலுவற்ற தேசிய தலைவர்கள் போன்றவை, பலமான கட்சிகளை கொண்ட ஒரு நம்பிக்கையற்ற கூட்டணியையே உருவாக்குமென அறிய முடிகிறது.


தற்போதைய மம்தாவின் கூட்டணி முயற்சி கூட காங்கிரசை உள்ளடக்கிய எதிர்கட்சிகளின் கூட்டணியா அல்லது மாநில கட்சிகள் மட்டுமே மூன்றாம் அணியா என்ற குழப்பம் மாநாட்டிற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஏனெனில், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே காங்கிரஸ் மற்றும் பிஜேபி அல்லாத மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்ற கொள்கையை முன்வைத்து, அனைத்து மாநில கட்சிகளையும் தொடர்புகொண்டு வந்தார். மேலும், ‘தன்னாட்சி முன்னணி’ என்ற மூன்றாம் அணியாக அது செயல்படும் என்றும், அதற்காக 1:1 என்றொரு செயல்திட்டத்தையும் முன்வைத்தார். இதனை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்று தமது முழு ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான், மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டதும் நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ் ஆகியோர் புறக்கணித்ததும், அக்கூட்டணியின் ஆரம்பமே குழப்பமாய் இருப்பதை வெளிப்படையாக்குகிறது.

கூடவே, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மாயாவதி கலந்துகொள்ளாது தத்தம் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்ததும் இங்கே கவனிக்க வேண்டியதாய் அமைகிறது. காங்கிரசை பொருத்தமட்டில் கூட்டணி ஆட்சியே சாத்தியக்கூறு என்ற முடிவுக்கு வந்து வெகுநாளாகிவிட்டது. ஆகையால் முடிந்த அளவிற்கு, கூட்டணி பலத்தை பெருக்க செயல்பட்டு வருகிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாக அறிவிக்காவிடினும், அதை நோக்கியே நகர்வதாக கணிக்க முடிகிறது. இன்னொரு பக்கம், எதிரெதிராக இருந்த மாயாவதி - அகிலேஷ் யாதவின் திடீர் கூட்டணி உத்திர பிரதேச அரசியல் மட்டுமல்லாது மத்தியிலும் தொடருமென நம்பப்படுகிறது. கூடவே மாயாவதியின் பிரதமர் ஆசையும் ஏற்கனவே குழம்பியுள்ள எதிர்க்கட்சி கூட்டணியில் மேலும் குழப்பமாக அமைகிறது.

வாக்கு சதவீத அடிப்படையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியே இந்தியாவின் மூன்றாம் பெரிய கட்சியாகிறது. ஆனால், எம்பிக்கள் எண்ணிக்கையில் பார்த்தால் தனித்து போட்டியிட்ட அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகியவை மொத்தமாக காங்கிரஸ் கூட்டணியை விட கூடுதல் எண்ணிக்கையில் உள்ளது. மம்தா முன்வைத்த மூன்றாம் கூட்டணிக்கு வலுவான நம்பிக்கையும் இதுதான். தேசிய கட்சிகளின் கூட்டணியாக மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த காலம் போய், மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் வந்து சேரட்டும் என்பதே மம்தாவின் மாநாட்டின் மறைபொருளாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. டெல்லியிலிருந்து கூட்டணி துவங்கி மாநிலங்களுக்கு செல்லும் நிகழ்வை மாற்றி, கொல்கத்தாவில் இருந்து கூட்டணிக்கான அழைப்பு விடுத்து அதற்கு பிற மாநிலங்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களையும் பங்கேற்க வைத்தது மம்தாவின் முதல் வெற்றியாக கூட எடுத்துக்கொள்ளலாம்.


ஒப்பீட்டு அளவில் 1989 முதலே நாடாளுமன்றத்தில் தேசிய கட்சிகள் தங்களது பிடிகளை மெல்ல மெல்ல இழந்து, மாநில கட்சிகளின் பலம் அதிகரித்து வருவதை காண முடிகிறது. உதாரணத்திற்கு, 1989-ம் ஆண்டு 8 தேசிய கட்சிகளும் 17 மாநில கட்சிகளும் பங்கேற்ற நாடாளுமன்றத்தில் 2014-ம் ஆண்டு தேர்தலின் படி 5 தேசிய கட்சிகளும் 22 கட்சிகளும் அங்கம் வகிக்கிறது. அதிகபட்சமாக 1998 முதல் 2009 வரையிலும், 30-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் பாராளுமன்றத்தில் அங்கமாய் இருந்தன. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 1989-ல், 471 தேசிய கட்சிகள் வசமும், 46 மாநில கட்சி பிரதிநிதிகளாகவும் இருந்தனர். அதுவே தற்போது 16வது மக்களவையில் 342 தேசிய கட்சியினராகவும், 176 பேர் மாநிலக் கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். வாக்கு சதவீத அடிப்படையிலும் தேசிய கட்சிகளின் வாக்குகள் முறையே 73.3%-ல் இருந்து 60.7% ஆக சரிந்துள்ளது. இதனடிப்படையில், மாநில கட்சிகள் மட்டுமே அமைந்த கூட்டணி ஒன்று பெரும்பான்மை இலக்கை எட்டி ஆட்சியை பிடிக்கலாம் எனும் மம்தாவின் கணக்கு சாத்தியமானதே.

உண்மையில் கூட்டணியின் வெற்றியை புள்ளிவிவரங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. வலிமையான தலைவர்கள், பொதுவான கொள்கை உடன்பாடு, முக்கியமாக பொதுவான பிரதமர் வேட்பாளர் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் காரணிகளே வெற்றிகரமான கூட்டணியை நிர்ணயிக்கும். 1989-ல் ஆட்சியமைத்த தேசிய முன்னணியும், 1996-ல் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி அணியும் வலிமையான தலைவர்களும் போதிய வாக்கு சதவீதமும் பெற்றிருந்தாலும் கொள்கை முரண்பாடுகளும் பதவி சண்டைகளும் மக்களுக்கு மூன்றாம் அணிகள் மீதான நம்பிக்கையை தகர்த்தது. ஜனதாக்கட்சி ஆட்சியையும் சேர்த்து கணக்கிட்டால், மொத்தமாக 6 ஆண்டுகால ஆட்சியில் 6 பிரதமர்களை கண்டது கூட்டணி அரசியலின் பலவீனத்தை குறிக்கும். இதனை மம்தா கணக்கிட்டாரா என்பதை அறிய முடியாது, ஆனால் அடுத்து பேசிய தேவகௌடாவும் சரத் பவாரும் நன்கு அறிவர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தன்னாட்சி கூட்டணி வெற்றிபெறுமா என்பதை இப்போது கணிக்க முடியாமல் போனாலும், தன்னாட்சி பேசும் மாநில கட்சிகளின் குரல்கள் பாராளுமன்றத்தில் கனத்து கேட்கும் நாட்கள் வெகு தூரமில்லை என்பதே நிதர்சனம். முக்கியமாக, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததுள்ள பாஜகவின் மையப்படுத்தும் அரசாங்கம், மாநில அரசுகளை தன்னாட்சிக்கும் கூட்டணி அரசியலுக்கும் நகர்த்திக் கொண்டுவருவதை காண முடிகிறது.

இறுதியாக, நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல பாஜக பலம்வாய்ந்த கட்சியாக இருப்பதால், பல கட்சிகள் சேர்ந்து எதிர்க்கின்றது. ஆனால், நேருவுக்கு பிறகு தனிபெரும்பான்மை பெற்ற எந்த கட்சியும் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததில்லை; மாறாக கூட்டணி அரசுகளே அடுத்த முறை ஆட்சியமைக்கும் என்கிறது இந்திய அரசியல் வரலாறு. அப்படியெனில் சரியான பாதையை நோக்கித் தான் மம்தா பயணிக்கிறார் எனலாம். ஆனால் வெற்றியும் தோல்வியும் தேர்தல் முடிவுகள் அன்றே புலப்படும்; அதுவரை முயற்சியை கைவிடாமல் முன்னேறுவாரா மம்தா பானர்ஜீ என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். கூடுதலாக, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி எனும் அண்ணாவின் முழக்கம் தேசிய நீரோட்டத்தில் வழுப்பெற இந்த ‘ஒருங்கிணைந்த இந்தியா’ மாநாடு துவக்கமாக அமையலாம். அமைந்தால் மட்டுமே அன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய ‘ஜனநாயகத்தை காப்போம்; தேசத்தை காப்போம்’ எனும் கோசம் முழுமை பெரும்.

- ஆனந்தம்

வியாழன், 13 டிசம்பர், 2018

சீமான் கமல் சந்திப்பு - பிளவுபடுகிறதா தமிழ்தேசிய அரசியல் மய்யம்?

[கோகுலம் கதிர்  மார்ச் மாத இதழில் சீமான் கமல் சந்திப்பு - பிளவுபடுகிறதா தமிழ்தேசிய அரசியல்? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம், நிச்சயமாக ஏனைய அரசியல் அறிமுகங்களை விட வித்தியாசம் தான். சால்வைகளின்றி மாலைகளின்றி திராவிடம் அரசியல் கூறும் சுயமரியாதையின் மாண்போடு நடைபெற்ற புதியதொரு அரசியல் மாநாடு. அந்த மாநாட்டைப் போலவே வித்தியாசமானது அதற்குமுன் நிகழ்ந்த கமலின் சந்திப்புகள். கலைஞர், நல்லக்கண்ணு போன்ற மிக மூத்த அரசியல்வாதிகளின் ஆசிகளோடு, கலையுலக சகாக்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ஆகியோரது வாழ்த்துக்களோடு தனது அரசியல் பயணத்தை துவங்கினார். ஆனால், இவற்றிற்கு முற்றிலும் விசித்திரமாக அமைந்தது நாம் தமிழர் கட்சியின் சீமானுடனான சந்திப்பு. அதிலும், இருவரும் இணைந்து அளித்த பேட்டியானது அன்றைய தினத்தில் இந்திய அளவில் அதிகம் பார்த்த காணொளியாக ‘ட்ரென்ட்’ ஆனது.

தமிழகத்தில் தொலைந்துபோன அரசியல் நாகரீகத்தை மீட்டெடுத்த நிகழ்வாக இதைக் கருதினாலும் கமலஹாசனின் வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்து வாழ்த்து கூறியது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சீமானை ஆதரிக்கும் தமிழ்தேசிய
கருத்தியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், பா.ம.க இராமதாஸ், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கமலை ஒருபுறம் ஒருமித்து எதிர்ப்பு தெரிவிக்க, அவரை வழியசென்று வரவேற்று வாழ்த்து தெரிவித்த ஒரே தலைவராய் சீமான் தெரிகிறார். கொள்கைகள், கோட்பாடுகள், பார்வைகள் என அனைத்து அம்சத்திலும் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் இருவரும் ஒருசேர பேட்டியளிப்பது கட்சி வருமுன்னரே கூட்டனியா என்று அரசியல் நோக்கர்களையும் சிந்திக்கவைத்துள்ளது.

புதிய அரசியல் பயணம் துவங்கும் கமலஹாசன், ஒரு நல்லென்ன அடிப்படையில் சந்தித்திருந்தாலும் கொள்கை அடிப்படையில் இருவருக்குமான ஒரே தொடர்பு தமிழுணர்வு மட்டுமே. தமிழ்தேசிய அரசியலை முன்னெடுப்பவர் சீமான் என்றால், திராவிட சித்தாந்தங்களை அடிப்படியாகக் கொண்டவர், கமல். அவர், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினால், இவர் தமிழன் என்பது அடையாளம் மட்டுமே, தகுதி இல்லை என்பார். மேடை பேச்சுகளிலும் கூட, எளிய தமிழில் ஆக்ரோஷமாக உரையாற்றும் சீமானும் ‘தெளிவாக குழப்பும்’ கமலும் முற்றிலும் மாறுபட்ட கோணம் தான். இந்த மாறுபட்ட பார்வைகள் கூட அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பட்டமாக காண முடிந்தது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் ஊழல் குறித்தும் சீமானது கருத்துக்களை மறுத்துப்பேச முடியாத சூழலில் இருப்பதாக கமலஹாசனின் உடல்மொழி தெளிவாகக் கூறியது.

சீமானை பொறுத்தவரை, தான் மதிக்கும் மிகப்பெரிய திரைக் கலைஞரது புதிய முயற்சியை வாழ்த்துக்கூற வந்ததாகவே கூறினார். அவர்மீது கொண்ட மரியாதையினால் தாமே வந்ததாக கூறியதும் ஏற்புடையதே. தொடர்ந்து, கமல் மண்ணின் மைந்தன் என்பதால் அவரது மாற்று அரசியல் முயற்சியை வரவேற்பதாக கூறினார், சீமான். இந்த கருத்துதான் அவர் மீதான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது எனலாம். முக்கியமாக, தமிழ்தேசிய ஆர்வலர்களை பொறுத்தவரை திராவிட கருத்தியலை முன்வைக்கும் கமலின் அரசியலை மாற்று அரசியல் என வரவேற்பது தவறானது என்கின்றனர். அவர் கூறியது போல, கமலின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அது மெல்ல மெல்ல வளர்ந்து வரும் தமிழ்தேசிய அரசியலுக்கு முடிவுரை எழுதிவிடும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

சுப.உதயகுமார் ஒரு ஊடக விவாதத்தில் ஒருபடி மேலே சென்று சீமான் தங்களை எல்லாம் ஏமாற்றிவிட்டார் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்குள்ளுமே இந்த எதிர்ப்புக் குரல் இருப்பது சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. எந்த திராவிடத்தை எதிர்த்து அரசியல் மேடை அமைத்தாரோ, இன்று அதையே வலிமையாக ஆதரிக்கும் கமலின் அரசியலை ஆதரிக்கிறாரோ என்ற குரல்கள் கட்சியினுள்ளே வெளிப்படுகிறது. நடிகர்கள் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் களம் காண முடியாது என்று முழங்கிய சீமான், இன்று தனது கொள்கை என்னவென்று அறிவிக்காத கமலோடு அவசர கதியில் கரம்கோர்ப்பதா போன்ற எதிர்வினைகள் எழும்பியுள்ளது வியனரசு போன்ற கட்சியின் மூத்த தலைவர் இதனை ஊடகங்களிலேயே வெளிப்படையாக இந்த சந்திப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளது கட்சியின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக அமைகிறது.
தமிழ்தேசிய அரசியலை பொறுத்தவரை, பன்னெடுங்காலமாக இந்த கருத்தியல் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒற்றுமையின்மை காரணமாக வலுவான குரலாக அது இருந்ததில்லை. தற்போதும் கூட சீமான், திருமுருகன் காந்தி என இருவேறு பாதையாக தமிழ்தேசிய கருத்தியல் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், அரசியல் அரங்கில் அதன் ஒற்றை முகமாக வலுவாக அறியப்படுகிறார் சீமான். ஆனால் கமல் மீதான சீமானின் தற்போதைய இந்த ஆதரவு நிலைப்பாடு, அவரோடு பயணிக்கும் ஏனைய தமிழ்தேசிய அமைப்புகளை அவரிடமிருந்து விலகியிருக்கவும் செய்யலாம். இதன் முடிவு அரசியல் அரங்கில் மீண்டும் தமிழ்தேசிய அரசியல் வலிமையிழக்கவும் செய்யலாம். ஒருவேளை ஒத்த கருத்து இல்லாவிடினும் தேர்தல் நோக்கில் கூட்டணிக்கு அச்சாரமிட்டால், கொள்கைகளால் சீமான் பின் சேர்ந்த இளைஞர் கூட்டத்தின் பெரும் ஆதரவினை இழக்க நேரிடும் என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.

எது எப்படியாகினும் அமைதியாய் இருந்த தேன்கூட்டை கல்லெறிந்தவன் நிலைபோல, சீமான் பல முனைகளிலும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார். இது வெறும் அரசியல் நாகரீகமா அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா என்பதை கமலின் அரசியல் நகர்வுகளுக்கு சீமான் காட்டும் எதிர்வினைகளே தெளிவாக்கும். அதுவரை நாமும் பொறுத்திருப்போம்.

ஆனந்தம்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

அடங்காத சாதிவெறி.. தொடரும் ஆணவக் கொலைகள்..

[கோகுலம் கதிர் டிசம்பர் மாத இதழில்  என்று மாறும் இந்த நிலை? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

தர்மபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் - இவை, கடந்த சில வருடங்களில் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் மறக்கப்பட்டு போன பெயர்கள். சாதியத்தின் கோரமுகமாக இவர்களது மரணங்கள் சாட்சியளித்தாலும், மௌனித்து கிடக்கும் சமூகத்தில் எவ்வித மாற்றமில்லை. இதோ மீண்டுமோர் ஊரும் பெயருமாக - ஓசூர் நந்தேஷ் மற்றும் சுவாதி. மீண்டுமொரு காதல், மீண்டுமொரு எதிர்ப்பு, மீண்டுமொரு படுகொலை, மீண்டுமொரு குமுறலாய் கொட்டிக்கிடக்கிறது, ஊடகங்களின் செய்திகள் மற்றும் சமூக ஊடகத்தின் எதிர்வினைகள். கடத்தி, சித்தரவதை செய்து கொன்று, தலைமுடியை மழித்து, முகத்தை எரித்து தங்களது சாதியின் கௌரவத்தை காப்பாற்றியதாக கூறியுள்ளனர் அந்த கொலைகாரர்கள். உண்மையில், பெற்று வளர்த்த ஆசை மகளை ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு சாதி உயர்ந்ததா? என்ற கேள்வி நம் அனைவரது மனதிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.

தமிழர்களாகிய நாம் சாதிய அடையாளங்களை துறந்துவிட்டதாக நமக்கு நாமே பெருமையடித்துக் கொண்டாலும், உண்மையில் சாதியின் நிழலும் தாக்கமும் நம்மிடத்தே ஓட்டிக்கொண்டே தான் இருக்கின்றது. பண்பாடும் பாரம்பரியமாக நம்மிடையே பிறப்பு முதல் இறப்பு வரை சாதியம் கலந்துவிட்டது என்ற நிதர்சனத்தை நாம் ஆமோத்திதே ஆக வேண்டும். திருமணங்களிலும் திருவிழாக்களிலும் இவை சற்று தூக்கலாகவே வெளிப்படுவதை யாரும் இங்கே மறுக்கமுடியாது. மேலும் கலாச்சாரத்தின் மையமாக பெண்களை உருவகப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே நம்முடையது என்பதையும் பார்க்க வேண்டும். அவ்வாறாகவே, சாதியவாதிகளின் குறுகிய பார்வையில் சாதிப்பெருமை காக்கும் குலசாமியாகவும், குடும்பமானம் காக்கும் குலவிளக்காகவும் சித்தரிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர் செல்ல மகள்கள்.


ஆணவக் கொலைகள் மதரீதியாகவோ, சாதிரீதியாகவோ நிகழ்ந்தாலும், அவற்றில் பெரும்பாலும் காணப்படும் ஒற்றுமை - பெண்ணின் உறவினர்களே இதில் அதிகம் ஈடுபடுவது. ஒரு சாதிமறுப்பு திருமணத்தில் ஆண்-பெண் என இருவருமே பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டாலும், வசைச் சொற்களும் வன்முறைகளும் பெண்களையே பதம்பார்க்கிறது.  ஒரு ஆண் சாதியை மீறி திருமணம் செய்யும்போது வற்புறுத்தல் வெறுப்பு என ஒதுக்கும் சமூகம், ஒரு பெண் அதைச் செய்யும்போது வன்முறைக்கும் கொலைக்கும் துணிகிறது. தற்போது நந்தேஷ்-சுவாதி ஆணவக் கொலையிலும் அதுவே நாம் காண்கிறோம். இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் திட்டமிட்டு கொடூரமாக கொல்லும் அளவுக்கு சென்றது சுவாதியின் பெற்றோர்களே ஆவர். எனவே தான் இந்த ஆணவப் படுகொலைகளில் சாதியையும் தாண்டிய ஒரு பெண்ணடிமை காலச்சாரம் ஒட்டிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இவைபோக, தனது சாதியின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள என்று, சாதிப்பற்றாளர் முகமூடியை போட்டுக்கொண்டாலும், ஆணவக் கொலைகளில் உண்மையில் காணப்படுவது ஆதிக்கசாதி மனோபாவம் தான். ஒவ்வொரு காதல் விவகாரமும் பெற்றோருக்கு தெரியவரும்போது அங்கே முதலில் எடை போடப்படுவது சாதிய படிநிலை தான். சாதிய உணர்வாளர்கள் சாதிவெறியர்கள் ஆகுமிடமும் இதுதான்; ஆணவக் கொலைகளின் பிறப்பிடமும் இதுதான். வர்ணாசிர அபத்தங்கள் புரிந்தாலும் புரியாவிடினும், இவர்களும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு படிநிலையை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த படிநிலையில் இன்னார் தம்மைவிட உயர்ந்தோர் இவர் தம்மைவிட தாழ்ந்தோர் என அவராகவே ஒரு கற்பனை ஏணியை உருவாக்கி அதில் ஒரு படிக்கட்டை பிடித்துக்கொள்வார். இந்த படிக்கட்டுகளே தம் பிஞ்சுகளின் கனவுகளை ஏற்கவும் கொன்றொழிக்கவும் அளவுகோல் ஆயிற்று.

பொதுவெளியில் காட்டிக்கொள்ளாவிடினும் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்படும் சாதி விதை, ஒருவித சுயசாதிய பெருமிதங்களை வளர்த்தே வருகின்றன. இதற்கென உரம்போட்டு மெருகேற்றி குளிர்காய சில பல சாதிய சங்கங்களும் உயிர் வாழுகின்றன. இவைகளே இந்த படிநிலைகளையும் சாதிவெறியையும் விடாப்பிடியாக ஊட்டி வளர்த்து ஆணவக் கொலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. சாதிப்பற்றின் பெயரால் சுயசாதி கர்வமும் சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிரான மனநிலையையும் உருவாக்கி ஆணவக் கொலைகளின் வினையூக்கியாக செயல்படுகிறது. இன்னும் சில இடங்களில் அவர்களே ஆணவக் கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதும் வெளிப்படையே. பல இடங்களில் சாதிவெறி கொண்ட சொந்தங்களின் இகழ்மொழிகளும் தூண்டுதலுமே இந்தக் கொலைகளை அரங்கேற்றுகிறது.

இப்படியாக ஒரு சாதிவெறி கொண்ட குடும்பத்தில் பிறந்த பெண் தன்னைவிட தாழ்ந்த சாதியாக கருதப்படும் ஒரு ஆணை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டால், அவர்களில் ஒருவரோ அவர்கள் இருவரோ கொலை செய்யப்படுவர் என்பது தான் இதுவரை தமிழகத்தை அதிரவைத்த ஆணவக் கொலையின் சாராம்சமாக இருக்கிறது. இதற்கு சாதி சங்கங்களும் சாதிவெறி சொந்தங்களும் துணை நிற்பர்; உடன் சிறை செல்வர் என்பதும் நாம் கண்டதுவே. இது வெறும் ஆதிக்க சாதியினோடு மட்டுமில்லாமல் பிற சாதியினர் மத்தியிலும் பட்டியலின சாதிகளின் இடையிலும் கூட நடந்தே வருகிறது. நாம் முக்கிய செய்தியாக பார்த்தது போக, இன்னும் பெட்டிச் செய்தியாக, செய்தியாகக் கூட ஆகாமல் பல இடங்களில் இன்னமும் இந்த படுகொலைகள் அரங்கேறி வருகின்றது. கடந்த 5 வருடங்களில், மொத்தம் 187 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பதிலளிக்க வேண்டிய தமிழக அரசு தமிழகத்தில் ஆணவக் கொலைகளே நடப்பதில்லை என பகிரங்கமாக பொய்கூறி வருகிறது. இதற்கு பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் மட்டுமின்றி ஒருசில சாதி அமைப்புகளின் நெருக்கடியும் காரணமாக இருக்கலாம்.

உண்மையில், ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் பரவலானதே; தமிழகத்தைக் காட்டிலும் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் அதிகம். ஆனால் இம்மாநிலங்கோடு ஒப்பீடு செய்துகொள்வது நமக்கு பெருமைதானா என்று யோசிக்க வேண்டும். பொருளாதாரத்தில் சமூகநீதியில் எடுத்துக்காட்டான சமூகத்தில், சாதிவெறியும் அதன் கோரமுகமும் ஏன் இன்னும் தொடர வேண்டும்? 100 ஆண்டுகளுக்கு முன்னரே சுயமரியாதையும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே சாதி ஒழிப்பும் பேசிய தமிழகத்ததில் இன்றும் சாதியின் பெயரால் கொடுமைகள் கொலைகள் நடைபெறுவது வேதனைக்குரியதே. கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோருக்கான பாதுகாப்பு மற்றும் ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டங்கள் பற்றி அவ்வப்போது பேசி வந்தும் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்துவது இன்னும் பல இளம்நெஞ்சங்களை பலி கொடுக்கும்.

சாதி ஒழிப்பிற்கு அச்சாரம், சாதி மறுப்பு திருமணங்களே என்று உயர்த்தி குரல்கொடுத்த திராவிட கட்சிகள் இன்னமும் இந்த ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டாமல் காத்திருப்பதே பெரியாருக்கு செய்யும் துரோகமாக தான் பார்க்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி போன்ற திட்டங்கள் இன்னமும் பல சாதி மறுப்பாளர்களை சென்றடையவில்லை. ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டமும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோருக்கான பாதுகாப்பு பற்றியும் பெசிக்கொண்டிருக்கும் போதே நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் உணர வேண்டும். மாதமொரு செயற்கைக்கோள் ஏவி செவ்வாயினை தொட்டு பார்க்கும் முன்னோடி தேசத்தில், சாதிக்கொரு சங்கம் வைத்து சாதிவெறியை ஊட்டி வளர்க்கும் பிற்போக்குவாதிகளுக்கு என்ன இடம் என்பதை இந்த அரசுகள் கேள்விகேட்க முன்வர வேண்டும்.

முக்கியமாக, 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணும் தங்களது விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள நம் சட்டம் உரிமையளித்தாலும், இந்த சமூகத்தில் பெற்றோர்களே அந்த விருப்பத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிலும் சாதியத்தை பற்றுதலாய் கொண்டோர் யாவரும் ‘கௌசல்யா’ மற்றும் ‘சுவாதி’-ன் பெற்றோர்களின் ஒரு மிதப்படுத்தப்பட்ட உதாரணமே ஆகும். இதனை அனைத்து பெற்றோர்களும் உணர்தல் வேண்டும். சாதியின் கௌரவத்தை அவர்கள் தம் பெண்களின் மீது திணிப்பதை விட, அப்பெண்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் மனதில் சுமக்க வேண்டும். இதுவரை, பெரியாரின் கைத்தடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கௌசல்யாவாக அம்ருதாவாக அது சாதிக்கு எதிராக மீண்டும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களின் வடிவில் பெரியாரின் சாதி ஒழிப்பு மீண்டும் உயிர்த்தெழும்போது, அடங்காத சாதிவெறி அடக்கி ஒடுக்கப்படும். அதுவரை ஆணவக்கொலைக்கு வீழும் அனைவரும் விதையாவர்; எதிர்த்து எழுவோர் விழுதாவர். 
---
ஆனந்தம்

திங்கள், 16 அக்டோபர், 2017

ஒரு விண்ணப்பம் வாங்குறதுக்குள்ள..

இன்று காலை, கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். கணிணியில் மும்முரமாக(!) வேலை செய்து கொண்டிருந்த அம்மணியிடம் போய் வில்லங்க சான்றிதழ் (EC) வாங்குவதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும் என்று வினவினேன். மிகவும் அலட்சியமாக "கீழே கடையில இருக்கும்பா" என்றார். நமக்கு தெரிந்த பதில்தான் என்றாலும், புதிதாக கேள்விப்படுப்பவதை போல "என்னங்க இது, கவர்மென்ட் ஆபீஸ் விண்ணப்பம் கடையில கிடைக்கும்றீங்க?" ஆச்சரிய தொனியில் கேட்டேன். நம்மை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்புடன் "காலியாயிட்டு சார்" என்றார்.

வழக்கமாக யாராய் இருந்தாலும் அத்தோடு முடித்துக் கொள்வார்கள் என்ற மமதை அவரது பதிலில் இருந்தது. சரி ஆனது பாத்திரலாம் என்று, சிரித்த முகத்துடன் ஒரே ஒரு 'மந்திரம்' சொன்னேன். உடனடியாக அவர் உடல்மொழியில் அவ்வளவு மாற்றம். பதட்டத்துடன் கூடிய கோபத்தில் "ஹலோ அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? என்ன காலைலயே பிரச்சனை பண்ண வந்துருக்கீங்களா" என்று சத்தத்தை உயர்த்தினார். இம்முறை நான் அலட்சியமாக, "நீங்க தான EC பார்ம் இல்லன்னீங்க?" என்றேன். இன்னும் கோபமாக, "இருந்தா தரமாட்டாமோ.." என துவங்கி ஏதோ புலம்பிக்கொண்டே தன்னுடைய மேஜையை துலாவ துவங்கினார்.

அதற்குள் மொத்த அலுவலகத்தின் கவனமும் எங்கள் மீது விழ, பக்கத்தில் இருந்த அலுவலக உதவியாளரிடம் சொல்லி வேறு சில மேஜைகளில் தேடச்சொன்னார். ஒருசில ஊழியர்கள் என்னை நோட்டம் விட்டுக்கொண்டே தங்களது வேலையை பார்க்க துவங்கினர் (சட்ட பஞ்சாயத்து டீசர்ட் காரணமாக இருக்கலாம்). அடுத்த சில நொடிகளில் தீர்ந்துபோன விண்ணப்பம் அந்த அலுவலக உதவியாளரிடம் கிடைத்தது. விறுவிறுவென நகல் எடுக்கப்பட்டு, கேட்ட விண்ணப்பம் கைகளில் கிடைத்தது. என்ன ஒரு ஆச்சரியம்.!

விண்ணப்பம் கிடைத்ததும் நான் வேறொரு பக்கம் சென்று அதை நிரப்ப ஆரம்பித்தேன். பாவம் அந்த பெண்மணி மட்டும் தனியாக புலம்பிக் கொண்டிருந்தார். ஒரு நொடியில் ஒரு அரசு ஊழியரின் நடவடிக்கையை மாற்றிய அந்த மந்திரம் என்னவென்று தெரியுமா.. "உங்க பேர் என்னன்னு சொல்ல முடியுமா?" என்பது தான். என்னே பதட்டம்..! என்னே கோபம்..!! அன்பின் ஜேக்டோ-ஜியோ அன்பர்களே, அப்படி என்னத்தான் விசேசம் உங்கள் பெயர்களிலே?

பின்குறிப்பு: அரசு ஊழியர்கள் அனைவரும் நேம் பேட்ச் அணிந்துதான் பணிபுரிய வேண்டும் என்பது அரசாங்க விதி

- ஆனந்தம்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

கிணறு வெட்ட தோன்றிய பூதம்



சரியாக 2013-ம் வருடம் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று, 2013-14 பட்ஜெட் அறிவிப்பில் மாண்புமிகு நிதியமைச்சர் திரு.பன்னீர் செல்வம், “மாண்புமிகு முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க மத்திய அரசின் நிதியில் இருந்து ரூ.97.85 கோடி செலவில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டம் தமிழகத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்” என புதியதொரு அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த சில நாட்களில் அதாவது ஏப்ரல் 9, 2013 அன்று, ‘அந்த வெண்ண என்னடா சொல்றது’-ன்னு மாண்புமிகு 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதே திட்டத்திற்கு 2013-14 பட்ஜெட் தொகையில் ரூ.150 கோடி ஒதுக்கப்படும் என தன் பங்கிற்கும் அறிவித்தார்.

பின்னர் இதற்காக 59 பக்க அரசாணை (GO 116) ஒன்று வெளியிட்டு, இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று விலாவாரியாக படம்போட்டு விளக்கி, இதனை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. அடுத்து சில தினங்களில் எக்ஸ்னோரா அமைப்பு மூலம் இத்திட்ட இயக்குனர்கள் அனைவருக்கும் இதற்காக (அரசு செலவில்) சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.

அடுத்து 2014-15 (பிப்ரவரி 2014) பட்ஜெட் அறிவிப்பில், மாண்புமிகு நிதியமைச்சர் திரு.பன்னீர் செல்வம், மாண்புமிகு முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க (ஷப்பா.. இப்பவே கண்ண கட்டுதே) ‘தூய்மை கிராம திட்டத்தின்’ கீழ் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த ரூ.200 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.

பின்னர் அதே வருடம் ஆகஸ்டு மாதம் (8.8.2014), மாண்புமிகு 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக மூன்று சக்கர வாகனங்கள் வாங்க ரூ.44.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்காக ஏற்கனவே நிதியமைச்சர் அறிவித்த ரூ.200 கோடியில் இருந்து நிதி ஒதுக்குவதாகவும் மீதமுள்ள ரூ.155.90 கோடி திடக்கழிவு மேலாண்மை பணிக்காக செலவிடப்படும் என்றும் பின்னர் உத்தரவிடப்பட்டது.

நடுவில் திடீரென ‘தெய்வத்தை மனிதன் தண்டித்த விபரீதம்’ நடந்ததால் ஏனைய திட்டங்கள் போல இதுவும் சில மாத காலங்கள் கிடப்பில் போடப்பட்டு, அம்மா வருகைக்காக காத்திருந்தது.

அடுத்ததாக 2015ம் வருடம் மார்ச் மாதம், “மேற்சொன்ன அரசாணையில் சொன்னவை எல்லாம் நம்மால் செயல்படுத்த முடியாது (இத கண்டுபிடிக்க தான் ரெண்டு வருஷம்), அதனால் ஒரு 2000 ஊராட்சிகளில் மட்டும் ரூ.5.5 லட்சம் வீதம் ரூ.110 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவும்” என விரிவான திட்ட விளக்கத்துடன் திரு.ககன்தீப்சிங் பேடி ஒரு அரசாணை (GO 47) வெளியிடுகிறார். (யாருய்யா அவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கேன்னு தோனுதா?) மேலும் இதற்கான தொகை, ஏற்கனவே கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட ரூ.155.90 கோடியில் இருந்து செலவழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அடப்பாவிகளா, அந்த நிதியை அதுவரை பத்திரமாக பூட்டி தான் வச்சிருந்தீங்களா..?’-ன்னோ அந்த மீதி ரூ.45.90 கோடி என்னாச்சி..?’-ன்னோ நீங்கள் கேள்வியை எழுப்பக்கூடாது என்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பின்னர் இத்திட்டத்திற்கான ஊராட்சிகள் கண்டறியப்பட்டு, 01.05.2015 தேதி முதல் அவற்றில் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இத்திட்டம் ஆரம்பித்தார்களா இல்லையா என்றெல்லாம் நாம் கேள்வியெழுப்ப கூடாது என்பதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர் சகிதம் மாவட்ட வாரியாக ஒரு புகைப்படம் எடுத்து அரசாங்க கோப்பிலும் தினத்தந்தி செய்தியிலும் வெளியிட்டார்கள்.

அடுத்து செப்டம்பர் 3, 2015 அன்று, மறுபடியும் அந்த வெண்ண என்னடா சொல்றது’-ன்னு மாண்புமிகு 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன திட்டத்தை மேலும் 7000 ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி ரூ.300 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கிறார். இதற்கான திட்ட விளக்கத்துடன் நிதி ஆதாரம் குறித்த தகவலுடன் மேலும் ஒரு அரசாணை (GO 10) ஒன்று 2016ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படுதிறது. இந்த அரசாணையில் கவனிக்க வேண்டிய பகுதி - ரூ.300 கோடிக்கான நிதி ஆதாரம் பற்றிய விளக்கம் - இணைப்பு படத்தை பார்க்கவும்.

  
இப்போது பிப்ரவரி மாதம் மறுபடியும் ஒரு அரசாணை (GO 22) வெளியிடப்படுகிறது (எத்தனவாட்டி..!). அதாவது மேற்சொன்ன அரசாணைகளில் குறிப்பிட்ட ஒரு சில கட்டமைப்புகளை மாற்றி, அதற்கு பதில் குப்பை தொட்டிகள் வைக்க தலா ரூ.25,000 வீதம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்படுகிறது.

அடுத்ததாக ஜூன் 2016ல் இதே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட (அமோகம்..!) புதிதாக ஒரு அரசாணை (GO 69) வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான அம்சம், மேற்கூறிய அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து இதுவரை ரூ.319.56 கோடி வரை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (என்னது சிவாஜி செத்துட்டாரா.. என்ற குரல் உங்களுக்கும் ஒலிக்கிறதா..?).

பொழுதுபோகாமல், வண்டலூர் ஊராட்சியின் ஏதோ ஒரு கணக்கை தோண்ட போய், இவ்வளவு தெளிவான குழப்பங்கள் இதுவரை வந்துசேர்ந்துள்ளது. தமிழக அரசின் நிர்வாகத்திறனுக்கு இவையாவும் ஒரு நல்ல உதரணம். அதாவது மிக எளிதாக திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டியதை, சுய விளம்பரத்திற்காகவும் போதிய தொலைநோக்கு சிந்தனை இல்லாமலும் மாறி மாறி மாற்றியமைத்ததால் கடந்த மூன்று ஆண்டுகளில் தேங்கி நிற்கிறது கிராமப்புற திடக்கழிவு மேலாண்மை திட்டம்.

அறிவிக்கப்பட்ட தொகையை கணக்கிட்டு பார்க்கும்போது, ரூ.1000 கோடியை தொட்டாலும் இதற்கு உண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ரூ.320 கோடி மட்டுமே. அதிலும் இன்றுவரை செலவிடப்பட்டது ரூ.150 கோடி அளவிற்கு மட்டுமே இருக்கக்கூடும். ஆட்சியாளர்களே இப்படி இருக்கும்போது ஊராட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கைமட்டும் என்ன பூப்பறிக்குமா..? அவர்களும் தம் பங்கிற்கு கைவரிசை காட்ட ‘தூய்மை கிராமம் திட்டம்’ தற்போதைய அளவில் நிம்மதியாக அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சிகள் அமைக்கப்பட நோக்கமே இங்கு ஊசலாடிக் கொண்டிருக்க, உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி ஆவலுடன் நீதிமன்ற வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.

பி.கு: தற்போதைக்கு இந்த நெடுங்கதை முடிவுக்கு வந்தாலும் அப்பல்லோவில் இருந்து மாண்புமிகு தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மீண்டெழுந்து கோட்டைக்கு திரும்பியதும் இக்கதை தொடரும். அம்மாவுக்கு நன்றி

- ஆனந்தம்

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டு அரசியல் - 6

ஜல்லிக்கட்டு தடையினால் நாட்டு மாடுகள் இனமே அழிந்துவிடும் என்ற செய்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனையின் பின்னணியில் வெளிப்பட்டுள்ள முக்கிய விசயமும் இதுவே. ஆனால் இவர்கள் கூறி வருவதில் ஒரு பாதி மட்டுமே உண்மை, மீதி பாதி பொய். எது உண்மை எது பொய் என தெரிந்துகொள்வதற்கு முன்னர், நம் நாட்டின் மாடுகள் வளம் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. வேளாண்மை நாடு என்றழைக்கப்பட்ட இந்தியாவில் பன்னெடுங்காலமாக, கால்நடைகள் பகுதி ரீதியாக ஒவ்வொரு விதமான பணிகளுக்கு ஒவ்வொரு விதமான மாட்டினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணத்திற்கு, வட மாநிலங்களில் பெரும்பாலான மாடுகள் பால் உற்பத்திக்கே வளர்க்கப்பட்டன. காரணம், அவர்களது உணவு வழக்கங்களில் பால் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றது. மத்திய இந்தியா பகுதிகளில் உழவு போன்ற பணிகளுக்கும், பால் பயன்பாட்டுக்காகவும் வளர்க்கப்பட்டன. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில் பாலின் தேவை குறைவாக இருந்ததால் இங்கு உழவு மற்றும் பாரம் சுமக்கும் பணிகளுக்கே மாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் 1960-களுக்கு பிறகு, டிராக்டர்கள் உழவு மாடுகளது இடத்தையும், மோட்டார் வாகனங்கள் வண்டி மாடுகளது இடத்தையும், அதிகம் பால் தரக்கூடிய வெளிநாட்டு மாடுகள் சொற்ப அளவில் பால் தரக்கூடிய மாடுகளது இடத்தையும் பிடித்துக்கொள்ள காலப்போக்கில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக குறைய துவங்கியது. கடைசியாக 2012-ம் ஆண்டு கணக்கின்படி நாடு முழுவதும் 37 மாட்டினங்களும் 15,11,72,295 நாட்டு மாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 5 இனங்களின் மொத்த எண்ணிக்கை 24,59,550 (அதாவது 1.62%) மட்டுமே. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சில நூறு மாடுகளே தமிழகத்தின் 24 லட்சம் மாடுகளையும், நாடு முழுவதும் உள்ள 15 கோடி மாடுகளையும் காக்கிறது என்ற அளவில் தொடர்ந்து பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், பகுத்தறிவுக்கு பெயர் போன தமிழக இளைஞர்கள், இந்த முட்டாள்தனமான கருத்தை ஆராயாமல் ஆட்டு மந்தைகள் போல நம்பி வருகின்றனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகத்தின் பிரதானமான நாட்டு இனங்களாக அறியப்படுபவை - காங்கேயம், உம்பளாச்சேரி, புளிக்குலம், பர்கூர் மற்றும் மலைமாடு. இவை போக சொற்ப அளவில், பிற மாட்டினங்களும் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.  இவையாவும் முழுக்க முழுக்க பணிகளுக்கு உகந்த மாடுகளாகவே அறியப்படுபவை. காங்கேயம் பாரம் சுமக்கவும், உம்பளாச்சேரி ஏர் உழவும், பர்கூர் மற்றும் மலைமாடுகள் மலைப்பகுதிக்கு உகந்த காளைகளாகவும் அறியப்படுவன. அதே சமயம் இவற்றின் பசுக்கள், மாடு வளர்ப்பவர்களது சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவே பால் தரக்கூடியவை. இன்று ஜல்லிக்கட்டுக்கு பின்னணியில் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அதாவது நாட்டு மாடுகளின் பால் தான் வேண்டும் என கூச்சல் போட்டால், நமக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கப்போவது வட நாட்டு மாடுகளான கிர், சிந்தி, சாஹிவால் போன்றவையின் பால்களே அன்றி தமிழக பசுக்களின் பால் அல்ல. காரணம் - வெளிநாட்டு மாடுகள் சராசரியாக நாளொன்றுக்கு 7 லிட்டருக்கு மேல் பால் கொடுத்துக்கொண்டிருக்க, வட நாட்டு மாடுகள் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுக்க, தமிழ்நாட்டு மாடுகளோ சராசரியாக 1.5 லிட்டர் அளவுக்கு கூட பால் தராது என்பதே உண்மை.

இதன் காரணமாகவே நாடு முழுவதும், பால் உற்பத்தியை பெருக்க 1960-கள் முதல் வெளிநாட்டு மாடுகள் ஊக்குவிக்கப்பட்டது. எந்திரங்களது வருகைக்கு பிறகு, தமிழக காளைகளது வேலைகள் பறிபோக, பால் வளமில்லாத பசுக்களும் முக்கியத்துவத்தை இழக்க, கொஞ்சம் கொஞ்சமாக இவ்வினங்களது எண்ணிக்கையும் சரிந்து கொண்டே போனது. 2012-ன் படி, தேசிய அளவில் 79% அளவிற்கு நாட்டு மாடுகள் எண்ணிக்கை இருந்தாலும், தமிழகத்தில் வெறும் 28% மாடுகள் மட்டுமே நாட்டு மாடுகளாக உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருந்த காலத்திலேயே (2007-2012) நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 35% குறைந்துபோனது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆக, ஜல்லிக்கட்டு நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக மாட்டினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி. என்னை பொருத்தவரை, ஜல்லிக்கட்டை விட நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டிய விசயமும் இதுவே. ஆனால், தங்களது சுயநலத்திற்காக திட்டம் போட்டு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒருசிலர், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - பீட்டாவுக்கு தடை என்றளவில் இதனை திசைமாற்றி கொண்டிருக்கிறார்கள்.  

எது பொய்? எது உண்மை? -  நாம் நினைப்பதை விட வேகமாக நாட்டு மாடுகள் அழிந்து கொண்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. வேலூர் பகுதியை சேர்ந்த ஆலம்பாடி என்ற இனம் நம் கண்முன்னே அழிந்ததே அதற்கு முக்கிய சான்று. ஆனால் இங்கே பொய் என்பது எதுவென்றால், ஜல்லிக்கட்டு நடத்திவிட்டால் நாட்டு மாடுகள் அனைத்தையும் காப்பாற்றி விடலாம் என்ற பரப்புரை. இன்னும் ஒருபடி மேலே சென்று மாடுகளை பற்றியே அறியாத தலைமுறையிடம் சென்று “Jallikattu is a Breeding Science” என்றெல்லாம் நகைப்புக்குரிய வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி எல்லாம் இந்த வகையினர் தான். ஆனால், இவற்றையெல்லாம் நீங்கள் பொதுதளத்திலோ, நேரடியாகவோ கேள்வி எழுப்பினால், அறிவார்ந்த சிந்தனைகளை தாண்டி உண்மைக்கு புறம்பான பதில்களே கிடைக்கும். அதற்கும் மேலே சென்றால், நீங்கள் ஆபாசமான வசவு சொற்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், இது தானே அவர்கள் கூறும் தமிழனின் மரபு..!

சரி, இப்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டு போராடி வருபவர்களது நோக்கம் என்னவாக இருக்கும்? அழிந்து வரும் நாட்டு மாடுகள் இனத்தை எப்படி காப்பாற்றலாம்? அடுத்த பதிவுகளில் காணலாம்.

- தொடரும்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டு அரசியல் - 5


ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி பற்றியும், A1/A2 பால் விவகாரத்தின் உண்மைகள் பற்றியும் கடந்த பதிவுகளில் தெரிவித்திருந்தேன். அடுத்து ஜல்லிக்கட்டுக்கும் அழிந்து வரும் நாட்டு மாடுகள் பிரச்சனைக்குமான தொடர்புகள் பற்றி காணும் முன், ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றிய சில விளக்கங்கள். ஜல்லிக்கட்டு என்ற சொல்லில் பொதுவாக நாம் குறிப்பிடுவது ஜல்லிக்கட்டு தவிர மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல், காளை விடும் திருவிழா என பலவிதமான பெயர்களில் வெவ்வேறு விதமாக காளைகளை சம்பந்தப்படுத்தி விளையாடும் ஒரு விளையாட்டாகும். வாடிவாசல் முதல் கயிறு கட்டி காளைகளை விரட்டும் முறை வரை ஊருக்கொரு விதமாக நடத்தப்படும் இவ்விளையாட்டுகள் பெரும்பாலும் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே நடப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் அந்தந்த பகுதி மாடுகளே பிரதானமாக இடம்பெறும். உதாரணத்திற்கு, மதுரை மாவட்ட போட்டிகளில் புலிக்குளம் மாடுகளும், தஞ்சை பகுதிகளில் உம்பளாச்சேரி இனங்களும், கோவை பகுதியில் நடைபெறும் ரேக்ளா ரேஸுக்கு காங்கேயம் வகைகளுமே அதிகமாக இடம்பெறும்.

ஆரம்ப காலங்களில் அறுவடைக்கு பிந்தைய ஓய்வுகால விளையாட்டாக அறியப்பட்ட இவ்விளையாட்டுகள், பின்னர் கோவில் திருவிழாக்களை சார்ந்த கொண்டாட்டமாகவும் பார்க்கப்பட்டது. பின்னர் சாதி ரீதியான கட்டமைப்புகள் கோவில்களையும் திருவிழாக்களையும் ஆக்கிரமித்துக்கொள்ள, முழுக்க முழுக்க ஒருசில சாதிக்கு உட்பட்ட விளையாட்டாகவே இது சுருங்கிப்போனது. தமிழர்களின் வீர விளையாட்டு என்று தமிழர்கள் அனைவருமே என்ன தான் பெருமையடித்து கொண்டாலும், பெரும்பான்மை ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் இதனை சுயசாதி கவுரவமாகவே போற்றி வருகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு விதத்தில் சாதியோடு கட்டிவைக்கப்பட்ட இந்த கலாச்சார அடையாளமே ஜல்லிக்கட்டை காப்பாற்றி வந்துள்ளது என்றே கூற வேண்டும். வேகமெடுத்து வரும் நகரமயமாக்கலில், குலதெய்வங்களே மறந்துபோகும் போது ஜல்லிக்கட்டு மட்டும் தப்பித்திருக்குமா என்ன..! உண்மையில் 2015ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை இப்பகுதிகளின் சாதிய கட்டமைப்புகளே தாங்கி வந்தது என்பதையும் மறுக்கமுடியாது.

உலகெங்கிலும் காளைகளுக்கான தேவை நான்காக உள்ளது. உழவுத்தொழில், வண்டி இழுத்தல், இனச்சேர்க்கை மற்றும் கறி பயன்பாடு. ஆனால் தமிழகத்தில் இது சற்று வித்தியாசம். இங்கே கறி பயன்பாடு மிகவும் சொற்பம், ஆனால் ஜல்லிக்கட்டு மாதிரியான விளையாட்டுகளே நான்காம் தேவையாக உள்ளது. டிராக்டர்கள் வருகைக்கு முன்னர், உழவுக்கும் இழுவைக்கும் வண்டி மாடுகள் என்று வளர்க்கப்பட்டது. இவைகள் கருத்தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதைப் போல, இன விருத்திக்காகவே பொலி காளைகள் என்பவை வளர்க்கப்படுகிறது. மூன்றாவதாக, ஜல்லிக்கட்டு மாடுகள் - இம்மாதிரியான விளையாட்டுகளுக்காகவே வளர்க்கப்படுவன. ஓய்வு நேர விளையாட்டாக இருந்த வரை ஜல்லிக்கட்டுக்கு உழவுக்கு பயன்படுத்தப்படும் மாடுகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால், பெருமையின் அடையாளமாக அல்லது தனியொரு கொண்டாட்டமாக ஆக்கப்பட்ட பின், இதற்கென பிற பணிகளில் ஈடுபடுத்தாமல் ஜல்லிக்கட்டு மாடுகள் என்றே வருடத்திற்கு சில லகரங்கள் செலவழித்து வளர்க்கப்படுகின்றன.

மாடு வளர்ப்பவர்களை பொருத்தவரை, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளொன்றுக்கு 100 முதல் 500 ரூபாய் வரை செலவழித்து வளர்ப்பதாக தெரிவிக்கின்றனர். வாடிவாசலை தாண்டி வரும் காளைகள் களத்தில் காட்டும் ஆக்ரோஷமும் மாடுபிடி வீரர்களின் கைக்கு சிக்காமல் மீள்வதுமே அவர்கள் எதிர்பார்க்கும் வெகுமதி. அங்கே காளைகளை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு மட்டுமே பரிசுப் பொருட்களும் வெகுமதிகளும். இப்படி எந்த பொருளாதார பலனும் இல்லாத பெருமையின் அடையாளமாகவே மாடு வளர்ப்பவர்கள் இப்போட்டியை கருதுகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இரண்டு விசயங்கள். ஒன்று - மாடு வளர்க்கும் முறை; இரண்டாவது - ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறத்தப்படுகிறதா என்ற கேள்வி. பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா முழுவதும் மாடுகள் என்பது பால் தரும் விலங்கினம் என்பதையும் தாண்டி குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் போலவே பெரும்பாலும் வளர்க்கப்படும். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள், ரேஸ்களுக்கு தயார்செய்யப்படும் கார்களை போல சிறப்பு கவனிப்புகளுடன் வசதிகளுடன் வளர்க்கப்பட்டு வரும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கில் நம்மவர்கள் கோட்டை விட்ட இடமும் இதுதான். விலங்குகள் நல ஆர்வலர்களை விட, நம்முடைய கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் உண்மையில் அதீத அக்கறையுடன் வளர்க்கப்படுகின்றன. ஆனால், நீதிமன்றத்திற்குள் இதனை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர் நம்முடைய ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள். இரண்டாவதாக, போட்டியின் போது காளைகள் துன்புறத்தப்படுகிறதா என்றால் முழுவதுமாக இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஜல்லிக்கட்டு பேரவைகள் சார்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகள் கொண்டு அளவிடும் போது மாடுகள் துன்புறத்தப்பட வாய்ப்பில்லை தான்; ஆனால் இவற்றை முழுமையாக செயல்படுத்தும் பட்சத்தில் தான். இதில் விதிமுறை மீறல்கள் என்பதும் ஆங்காங்கே நடைபெற்றதையும் நாம் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு, 2014ம் ஆண்டு போதிய தடுப்புகள் இல்லாததால் கிணற்றில் விழுந்து காயமடைந்த மாடுகள் போன்ற நிகழ்வுகளும் செய்திதாள்களில் பதிவாகியுள்ளது.

அதற்காக, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தடலாமா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய பதில். 90% வரை விதிமுறைப்படி நடக்கும் போட்டியில், மீதமுள்ள 10% பேர் தவறுக்காக அனைவரையும் பழிப்பது ஏற்கமுடியாது. மற்றொன்று, இந்த சூழ்நிலைக்காகவே இம்மாடுகள் தயார் செய்யப்பட்டு வரும்போது அவைகள் அதற்கென தம்மை தகவமைத்து கொண்டுதான் களத்திற்கு வரும். இவற்றை எழுத்து ரீதியாகவோ, ஆதாரமாகவோ விவரிக்க முடியாது. ஆனால், களத்தில் அவைகளின் செயல்பாடுகளையும், வீரர்களை எதிர்கொள்ளும் விதத்தையும் நீக்கினால் இதனை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான், இவ்வழக்கு சட்ட ரீதியான வாதங்களை தாண்டி விவாதிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. இதெல்லாம், ஒருபுறம் இருக்க ஜல்லிக்கட்டு தடைப்பட்டால் நாட்டு மாடுகள் அழிந்துபோகுமா? ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல இதில் சர்வதேச சதி உள்ளதா? அடுத்த பதிவுகளில் காணலாம்

தொடரும்