ஞாயிறு, 2 டிசம்பர், 2018

அடங்காத சாதிவெறி.. தொடரும் ஆணவக் கொலைகள்..

[கோகுலம் கதிர் டிசம்பர் மாத இதழில்  என்று மாறும் இந்த நிலை? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

தர்மபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் - இவை, கடந்த சில வருடங்களில் பரபரப்பாக பேசப்பட்டு பின்னர் மறக்கப்பட்டு போன பெயர்கள். சாதியத்தின் கோரமுகமாக இவர்களது மரணங்கள் சாட்சியளித்தாலும், மௌனித்து கிடக்கும் சமூகத்தில் எவ்வித மாற்றமில்லை. இதோ மீண்டுமோர் ஊரும் பெயருமாக - ஓசூர் நந்தேஷ் மற்றும் சுவாதி. மீண்டுமொரு காதல், மீண்டுமொரு எதிர்ப்பு, மீண்டுமொரு படுகொலை, மீண்டுமொரு குமுறலாய் கொட்டிக்கிடக்கிறது, ஊடகங்களின் செய்திகள் மற்றும் சமூக ஊடகத்தின் எதிர்வினைகள். கடத்தி, சித்தரவதை செய்து கொன்று, தலைமுடியை மழித்து, முகத்தை எரித்து தங்களது சாதியின் கௌரவத்தை காப்பாற்றியதாக கூறியுள்ளனர் அந்த கொலைகாரர்கள். உண்மையில், பெற்று வளர்த்த ஆசை மகளை ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு சாதி உயர்ந்ததா? என்ற கேள்வி நம் அனைவரது மனதிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.

தமிழர்களாகிய நாம் சாதிய அடையாளங்களை துறந்துவிட்டதாக நமக்கு நாமே பெருமையடித்துக் கொண்டாலும், உண்மையில் சாதியின் நிழலும் தாக்கமும் நம்மிடத்தே ஓட்டிக்கொண்டே தான் இருக்கின்றது. பண்பாடும் பாரம்பரியமாக நம்மிடையே பிறப்பு முதல் இறப்பு வரை சாதியம் கலந்துவிட்டது என்ற நிதர்சனத்தை நாம் ஆமோத்திதே ஆக வேண்டும். திருமணங்களிலும் திருவிழாக்களிலும் இவை சற்று தூக்கலாகவே வெளிப்படுவதை யாரும் இங்கே மறுக்கமுடியாது. மேலும் கலாச்சாரத்தின் மையமாக பெண்களை உருவகப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே நம்முடையது என்பதையும் பார்க்க வேண்டும். அவ்வாறாகவே, சாதியவாதிகளின் குறுகிய பார்வையில் சாதிப்பெருமை காக்கும் குலசாமியாகவும், குடும்பமானம் காக்கும் குலவிளக்காகவும் சித்தரிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர் செல்ல மகள்கள்.


ஆணவக் கொலைகள் மதரீதியாகவோ, சாதிரீதியாகவோ நிகழ்ந்தாலும், அவற்றில் பெரும்பாலும் காணப்படும் ஒற்றுமை - பெண்ணின் உறவினர்களே இதில் அதிகம் ஈடுபடுவது. ஒரு சாதிமறுப்பு திருமணத்தில் ஆண்-பெண் என இருவருமே பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டாலும், வசைச் சொற்களும் வன்முறைகளும் பெண்களையே பதம்பார்க்கிறது.  ஒரு ஆண் சாதியை மீறி திருமணம் செய்யும்போது வற்புறுத்தல் வெறுப்பு என ஒதுக்கும் சமூகம், ஒரு பெண் அதைச் செய்யும்போது வன்முறைக்கும் கொலைக்கும் துணிகிறது. தற்போது நந்தேஷ்-சுவாதி ஆணவக் கொலையிலும் அதுவே நாம் காண்கிறோம். இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் திட்டமிட்டு கொடூரமாக கொல்லும் அளவுக்கு சென்றது சுவாதியின் பெற்றோர்களே ஆவர். எனவே தான் இந்த ஆணவப் படுகொலைகளில் சாதியையும் தாண்டிய ஒரு பெண்ணடிமை காலச்சாரம் ஒட்டிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இவைபோக, தனது சாதியின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள என்று, சாதிப்பற்றாளர் முகமூடியை போட்டுக்கொண்டாலும், ஆணவக் கொலைகளில் உண்மையில் காணப்படுவது ஆதிக்கசாதி மனோபாவம் தான். ஒவ்வொரு காதல் விவகாரமும் பெற்றோருக்கு தெரியவரும்போது அங்கே முதலில் எடை போடப்படுவது சாதிய படிநிலை தான். சாதிய உணர்வாளர்கள் சாதிவெறியர்கள் ஆகுமிடமும் இதுதான்; ஆணவக் கொலைகளின் பிறப்பிடமும் இதுதான். வர்ணாசிர அபத்தங்கள் புரிந்தாலும் புரியாவிடினும், இவர்களும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு படிநிலையை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த படிநிலையில் இன்னார் தம்மைவிட உயர்ந்தோர் இவர் தம்மைவிட தாழ்ந்தோர் என அவராகவே ஒரு கற்பனை ஏணியை உருவாக்கி அதில் ஒரு படிக்கட்டை பிடித்துக்கொள்வார். இந்த படிக்கட்டுகளே தம் பிஞ்சுகளின் கனவுகளை ஏற்கவும் கொன்றொழிக்கவும் அளவுகோல் ஆயிற்று.

பொதுவெளியில் காட்டிக்கொள்ளாவிடினும் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்படும் சாதி விதை, ஒருவித சுயசாதிய பெருமிதங்களை வளர்த்தே வருகின்றன. இதற்கென உரம்போட்டு மெருகேற்றி குளிர்காய சில பல சாதிய சங்கங்களும் உயிர் வாழுகின்றன. இவைகளே இந்த படிநிலைகளையும் சாதிவெறியையும் விடாப்பிடியாக ஊட்டி வளர்த்து ஆணவக் கொலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. சாதிப்பற்றின் பெயரால் சுயசாதி கர்வமும் சாதிமறுப்பு திருமணங்களுக்கு எதிரான மனநிலையையும் உருவாக்கி ஆணவக் கொலைகளின் வினையூக்கியாக செயல்படுகிறது. இன்னும் சில இடங்களில் அவர்களே ஆணவக் கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதும் வெளிப்படையே. பல இடங்களில் சாதிவெறி கொண்ட சொந்தங்களின் இகழ்மொழிகளும் தூண்டுதலுமே இந்தக் கொலைகளை அரங்கேற்றுகிறது.

இப்படியாக ஒரு சாதிவெறி கொண்ட குடும்பத்தில் பிறந்த பெண் தன்னைவிட தாழ்ந்த சாதியாக கருதப்படும் ஒரு ஆணை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டால், அவர்களில் ஒருவரோ அவர்கள் இருவரோ கொலை செய்யப்படுவர் என்பது தான் இதுவரை தமிழகத்தை அதிரவைத்த ஆணவக் கொலையின் சாராம்சமாக இருக்கிறது. இதற்கு சாதி சங்கங்களும் சாதிவெறி சொந்தங்களும் துணை நிற்பர்; உடன் சிறை செல்வர் என்பதும் நாம் கண்டதுவே. இது வெறும் ஆதிக்க சாதியினோடு மட்டுமில்லாமல் பிற சாதியினர் மத்தியிலும் பட்டியலின சாதிகளின் இடையிலும் கூட நடந்தே வருகிறது. நாம் முக்கிய செய்தியாக பார்த்தது போக, இன்னும் பெட்டிச் செய்தியாக, செய்தியாகக் கூட ஆகாமல் பல இடங்களில் இன்னமும் இந்த படுகொலைகள் அரங்கேறி வருகின்றது. கடந்த 5 வருடங்களில், மொத்தம் 187 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பதிலளிக்க வேண்டிய தமிழக அரசு தமிழகத்தில் ஆணவக் கொலைகளே நடப்பதில்லை என பகிரங்கமாக பொய்கூறி வருகிறது. இதற்கு பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் மட்டுமின்றி ஒருசில சாதி அமைப்புகளின் நெருக்கடியும் காரணமாக இருக்கலாம்.

உண்மையில், ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் பரவலானதே; தமிழகத்தைக் காட்டிலும் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் அதிகம். ஆனால் இம்மாநிலங்கோடு ஒப்பீடு செய்துகொள்வது நமக்கு பெருமைதானா என்று யோசிக்க வேண்டும். பொருளாதாரத்தில் சமூகநீதியில் எடுத்துக்காட்டான சமூகத்தில், சாதிவெறியும் அதன் கோரமுகமும் ஏன் இன்னும் தொடர வேண்டும்? 100 ஆண்டுகளுக்கு முன்னரே சுயமரியாதையும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே சாதி ஒழிப்பும் பேசிய தமிழகத்ததில் இன்றும் சாதியின் பெயரால் கொடுமைகள் கொலைகள் நடைபெறுவது வேதனைக்குரியதே. கடந்த காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோருக்கான பாதுகாப்பு மற்றும் ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டங்கள் பற்றி அவ்வப்போது பேசி வந்தும் இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்துவது இன்னும் பல இளம்நெஞ்சங்களை பலி கொடுக்கும்.

சாதி ஒழிப்பிற்கு அச்சாரம், சாதி மறுப்பு திருமணங்களே என்று உயர்த்தி குரல்கொடுத்த திராவிட கட்சிகள் இன்னமும் இந்த ஆணவக் கொலைகளுக்கு முடிவுகட்டாமல் காத்திருப்பதே பெரியாருக்கு செய்யும் துரோகமாக தான் பார்க்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி போன்ற திட்டங்கள் இன்னமும் பல சாதி மறுப்பாளர்களை சென்றடையவில்லை. ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டமும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டோருக்கான பாதுகாப்பு பற்றியும் பெசிக்கொண்டிருக்கும் போதே நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் உணர வேண்டும். மாதமொரு செயற்கைக்கோள் ஏவி செவ்வாயினை தொட்டு பார்க்கும் முன்னோடி தேசத்தில், சாதிக்கொரு சங்கம் வைத்து சாதிவெறியை ஊட்டி வளர்க்கும் பிற்போக்குவாதிகளுக்கு என்ன இடம் என்பதை இந்த அரசுகள் கேள்விகேட்க முன்வர வேண்டும்.

முக்கியமாக, 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணும் தங்களது விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள நம் சட்டம் உரிமையளித்தாலும், இந்த சமூகத்தில் பெற்றோர்களே அந்த விருப்பத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிலும் சாதியத்தை பற்றுதலாய் கொண்டோர் யாவரும் ‘கௌசல்யா’ மற்றும் ‘சுவாதி’-ன் பெற்றோர்களின் ஒரு மிதப்படுத்தப்பட்ட உதாரணமே ஆகும். இதனை அனைத்து பெற்றோர்களும் உணர்தல் வேண்டும். சாதியின் கௌரவத்தை அவர்கள் தம் பெண்களின் மீது திணிப்பதை விட, அப்பெண்களின் ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் மனதில் சுமக்க வேண்டும். இதுவரை, பெரியாரின் கைத்தடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கௌசல்யாவாக அம்ருதாவாக அது சாதிக்கு எதிராக மீண்டும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களின் வடிவில் பெரியாரின் சாதி ஒழிப்பு மீண்டும் உயிர்த்தெழும்போது, அடங்காத சாதிவெறி அடக்கி ஒடுக்கப்படும். அதுவரை ஆணவக்கொலைக்கு வீழும் அனைவரும் விதையாவர்; எதிர்த்து எழுவோர் விழுதாவர். 
---
ஆனந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக