ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டு அரசியல் - 5


ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி பற்றியும், A1/A2 பால் விவகாரத்தின் உண்மைகள் பற்றியும் கடந்த பதிவுகளில் தெரிவித்திருந்தேன். அடுத்து ஜல்லிக்கட்டுக்கும் அழிந்து வரும் நாட்டு மாடுகள் பிரச்சனைக்குமான தொடர்புகள் பற்றி காணும் முன், ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றிய சில விளக்கங்கள். ஜல்லிக்கட்டு என்ற சொல்லில் பொதுவாக நாம் குறிப்பிடுவது ஜல்லிக்கட்டு தவிர மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல், காளை விடும் திருவிழா என பலவிதமான பெயர்களில் வெவ்வேறு விதமாக காளைகளை சம்பந்தப்படுத்தி விளையாடும் ஒரு விளையாட்டாகும். வாடிவாசல் முதல் கயிறு கட்டி காளைகளை விரட்டும் முறை வரை ஊருக்கொரு விதமாக நடத்தப்படும் இவ்விளையாட்டுகள் பெரும்பாலும் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே நடப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் அந்தந்த பகுதி மாடுகளே பிரதானமாக இடம்பெறும். உதாரணத்திற்கு, மதுரை மாவட்ட போட்டிகளில் புலிக்குளம் மாடுகளும், தஞ்சை பகுதிகளில் உம்பளாச்சேரி இனங்களும், கோவை பகுதியில் நடைபெறும் ரேக்ளா ரேஸுக்கு காங்கேயம் வகைகளுமே அதிகமாக இடம்பெறும்.

ஆரம்ப காலங்களில் அறுவடைக்கு பிந்தைய ஓய்வுகால விளையாட்டாக அறியப்பட்ட இவ்விளையாட்டுகள், பின்னர் கோவில் திருவிழாக்களை சார்ந்த கொண்டாட்டமாகவும் பார்க்கப்பட்டது. பின்னர் சாதி ரீதியான கட்டமைப்புகள் கோவில்களையும் திருவிழாக்களையும் ஆக்கிரமித்துக்கொள்ள, முழுக்க முழுக்க ஒருசில சாதிக்கு உட்பட்ட விளையாட்டாகவே இது சுருங்கிப்போனது. தமிழர்களின் வீர விளையாட்டு என்று தமிழர்கள் அனைவருமே என்ன தான் பெருமையடித்து கொண்டாலும், பெரும்பான்மை ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் இதனை சுயசாதி கவுரவமாகவே போற்றி வருகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு விதத்தில் சாதியோடு கட்டிவைக்கப்பட்ட இந்த கலாச்சார அடையாளமே ஜல்லிக்கட்டை காப்பாற்றி வந்துள்ளது என்றே கூற வேண்டும். வேகமெடுத்து வரும் நகரமயமாக்கலில், குலதெய்வங்களே மறந்துபோகும் போது ஜல்லிக்கட்டு மட்டும் தப்பித்திருக்குமா என்ன..! உண்மையில் 2015ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை இப்பகுதிகளின் சாதிய கட்டமைப்புகளே தாங்கி வந்தது என்பதையும் மறுக்கமுடியாது.

உலகெங்கிலும் காளைகளுக்கான தேவை நான்காக உள்ளது. உழவுத்தொழில், வண்டி இழுத்தல், இனச்சேர்க்கை மற்றும் கறி பயன்பாடு. ஆனால் தமிழகத்தில் இது சற்று வித்தியாசம். இங்கே கறி பயன்பாடு மிகவும் சொற்பம், ஆனால் ஜல்லிக்கட்டு மாதிரியான விளையாட்டுகளே நான்காம் தேவையாக உள்ளது. டிராக்டர்கள் வருகைக்கு முன்னர், உழவுக்கும் இழுவைக்கும் வண்டி மாடுகள் என்று வளர்க்கப்பட்டது. இவைகள் கருத்தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதைப் போல, இன விருத்திக்காகவே பொலி காளைகள் என்பவை வளர்க்கப்படுகிறது. மூன்றாவதாக, ஜல்லிக்கட்டு மாடுகள் - இம்மாதிரியான விளையாட்டுகளுக்காகவே வளர்க்கப்படுவன. ஓய்வு நேர விளையாட்டாக இருந்த வரை ஜல்லிக்கட்டுக்கு உழவுக்கு பயன்படுத்தப்படும் மாடுகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால், பெருமையின் அடையாளமாக அல்லது தனியொரு கொண்டாட்டமாக ஆக்கப்பட்ட பின், இதற்கென பிற பணிகளில் ஈடுபடுத்தாமல் ஜல்லிக்கட்டு மாடுகள் என்றே வருடத்திற்கு சில லகரங்கள் செலவழித்து வளர்க்கப்படுகின்றன.

மாடு வளர்ப்பவர்களை பொருத்தவரை, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நாளொன்றுக்கு 100 முதல் 500 ரூபாய் வரை செலவழித்து வளர்ப்பதாக தெரிவிக்கின்றனர். வாடிவாசலை தாண்டி வரும் காளைகள் களத்தில் காட்டும் ஆக்ரோஷமும் மாடுபிடி வீரர்களின் கைக்கு சிக்காமல் மீள்வதுமே அவர்கள் எதிர்பார்க்கும் வெகுமதி. அங்கே காளைகளை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு மட்டுமே பரிசுப் பொருட்களும் வெகுமதிகளும். இப்படி எந்த பொருளாதார பலனும் இல்லாத பெருமையின் அடையாளமாகவே மாடு வளர்ப்பவர்கள் இப்போட்டியை கருதுகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இரண்டு விசயங்கள். ஒன்று - மாடு வளர்க்கும் முறை; இரண்டாவது - ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறத்தப்படுகிறதா என்ற கேள்வி. பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா முழுவதும் மாடுகள் என்பது பால் தரும் விலங்கினம் என்பதையும் தாண்டி குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் போலவே பெரும்பாலும் வளர்க்கப்படும். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள், ரேஸ்களுக்கு தயார்செய்யப்படும் கார்களை போல சிறப்பு கவனிப்புகளுடன் வசதிகளுடன் வளர்க்கப்பட்டு வரும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கில் நம்மவர்கள் கோட்டை விட்ட இடமும் இதுதான். விலங்குகள் நல ஆர்வலர்களை விட, நம்முடைய கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் உண்மையில் அதீத அக்கறையுடன் வளர்க்கப்படுகின்றன. ஆனால், நீதிமன்றத்திற்குள் இதனை பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர் நம்முடைய ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள். இரண்டாவதாக, போட்டியின் போது காளைகள் துன்புறத்தப்படுகிறதா என்றால் முழுவதுமாக இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஜல்லிக்கட்டு பேரவைகள் சார்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகள் கொண்டு அளவிடும் போது மாடுகள் துன்புறத்தப்பட வாய்ப்பில்லை தான்; ஆனால் இவற்றை முழுமையாக செயல்படுத்தும் பட்சத்தில் தான். இதில் விதிமுறை மீறல்கள் என்பதும் ஆங்காங்கே நடைபெற்றதையும் நாம் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு, 2014ம் ஆண்டு போதிய தடுப்புகள் இல்லாததால் கிணற்றில் விழுந்து காயமடைந்த மாடுகள் போன்ற நிகழ்வுகளும் செய்திதாள்களில் பதிவாகியுள்ளது.

அதற்காக, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தடலாமா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய பதில். 90% வரை விதிமுறைப்படி நடக்கும் போட்டியில், மீதமுள்ள 10% பேர் தவறுக்காக அனைவரையும் பழிப்பது ஏற்கமுடியாது. மற்றொன்று, இந்த சூழ்நிலைக்காகவே இம்மாடுகள் தயார் செய்யப்பட்டு வரும்போது அவைகள் அதற்கென தம்மை தகவமைத்து கொண்டுதான் களத்திற்கு வரும். இவற்றை எழுத்து ரீதியாகவோ, ஆதாரமாகவோ விவரிக்க முடியாது. ஆனால், களத்தில் அவைகளின் செயல்பாடுகளையும், வீரர்களை எதிர்கொள்ளும் விதத்தையும் நீக்கினால் இதனை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான், இவ்வழக்கு சட்ட ரீதியான வாதங்களை தாண்டி விவாதிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. இதெல்லாம், ஒருபுறம் இருக்க ஜல்லிக்கட்டு தடைப்பட்டால் நாட்டு மாடுகள் அழிந்துபோகுமா? ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குறிப்பிடுவது போல இதில் சர்வதேச சதி உள்ளதா? அடுத்த பதிவுகளில் காணலாம்

தொடரும் 

1 கருத்து:

  1. இன்னும் கொஞ்சம் புள்ளிவிவர்ங்களின் ஆதார்ங்க்ள் பற்றி கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு