புதன், 24 ஆகஸ்ட், 2016

ஜல்லிக்கட்டு அரசியல் - 6

ஜல்லிக்கட்டு தடையினால் நாட்டு மாடுகள் இனமே அழிந்துவிடும் என்ற செய்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனையின் பின்னணியில் வெளிப்பட்டுள்ள முக்கிய விசயமும் இதுவே. ஆனால் இவர்கள் கூறி வருவதில் ஒரு பாதி மட்டுமே உண்மை, மீதி பாதி பொய். எது உண்மை எது பொய் என தெரிந்துகொள்வதற்கு முன்னர், நம் நாட்டின் மாடுகள் வளம் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. வேளாண்மை நாடு என்றழைக்கப்பட்ட இந்தியாவில் பன்னெடுங்காலமாக, கால்நடைகள் பகுதி ரீதியாக ஒவ்வொரு விதமான பணிகளுக்கு ஒவ்வொரு விதமான மாட்டினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணத்திற்கு, வட மாநிலங்களில் பெரும்பாலான மாடுகள் பால் உற்பத்திக்கே வளர்க்கப்பட்டன. காரணம், அவர்களது உணவு வழக்கங்களில் பால் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றது. மத்திய இந்தியா பகுதிகளில் உழவு போன்ற பணிகளுக்கும், பால் பயன்பாட்டுக்காகவும் வளர்க்கப்பட்டன. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில் பாலின் தேவை குறைவாக இருந்ததால் இங்கு உழவு மற்றும் பாரம் சுமக்கும் பணிகளுக்கே மாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டது.

பின்னர் 1960-களுக்கு பிறகு, டிராக்டர்கள் உழவு மாடுகளது இடத்தையும், மோட்டார் வாகனங்கள் வண்டி மாடுகளது இடத்தையும், அதிகம் பால் தரக்கூடிய வெளிநாட்டு மாடுகள் சொற்ப அளவில் பால் தரக்கூடிய மாடுகளது இடத்தையும் பிடித்துக்கொள்ள காலப்போக்கில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக குறைய துவங்கியது. கடைசியாக 2012-ம் ஆண்டு கணக்கின்படி நாடு முழுவதும் 37 மாட்டினங்களும் 15,11,72,295 நாட்டு மாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் 5 இனங்களின் மொத்த எண்ணிக்கை 24,59,550 (அதாவது 1.62%) மட்டுமே. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சில நூறு மாடுகளே தமிழகத்தின் 24 லட்சம் மாடுகளையும், நாடு முழுவதும் உள்ள 15 கோடி மாடுகளையும் காக்கிறது என்ற அளவில் தொடர்ந்து பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், பகுத்தறிவுக்கு பெயர் போன தமிழக இளைஞர்கள், இந்த முட்டாள்தனமான கருத்தை ஆராயாமல் ஆட்டு மந்தைகள் போல நம்பி வருகின்றனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகத்தின் பிரதானமான நாட்டு இனங்களாக அறியப்படுபவை - காங்கேயம், உம்பளாச்சேரி, புளிக்குலம், பர்கூர் மற்றும் மலைமாடு. இவை போக சொற்ப அளவில், பிற மாட்டினங்களும் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.  இவையாவும் முழுக்க முழுக்க பணிகளுக்கு உகந்த மாடுகளாகவே அறியப்படுபவை. காங்கேயம் பாரம் சுமக்கவும், உம்பளாச்சேரி ஏர் உழவும், பர்கூர் மற்றும் மலைமாடுகள் மலைப்பகுதிக்கு உகந்த காளைகளாகவும் அறியப்படுவன. அதே சமயம் இவற்றின் பசுக்கள், மாடு வளர்ப்பவர்களது சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவே பால் தரக்கூடியவை. இன்று ஜல்லிக்கட்டுக்கு பின்னணியில் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அதாவது நாட்டு மாடுகளின் பால் தான் வேண்டும் என கூச்சல் போட்டால், நமக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கப்போவது வட நாட்டு மாடுகளான கிர், சிந்தி, சாஹிவால் போன்றவையின் பால்களே அன்றி தமிழக பசுக்களின் பால் அல்ல. காரணம் - வெளிநாட்டு மாடுகள் சராசரியாக நாளொன்றுக்கு 7 லிட்டருக்கு மேல் பால் கொடுத்துக்கொண்டிருக்க, வட நாட்டு மாடுகள் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுக்க, தமிழ்நாட்டு மாடுகளோ சராசரியாக 1.5 லிட்டர் அளவுக்கு கூட பால் தராது என்பதே உண்மை.

இதன் காரணமாகவே நாடு முழுவதும், பால் உற்பத்தியை பெருக்க 1960-கள் முதல் வெளிநாட்டு மாடுகள் ஊக்குவிக்கப்பட்டது. எந்திரங்களது வருகைக்கு பிறகு, தமிழக காளைகளது வேலைகள் பறிபோக, பால் வளமில்லாத பசுக்களும் முக்கியத்துவத்தை இழக்க, கொஞ்சம் கொஞ்சமாக இவ்வினங்களது எண்ணிக்கையும் சரிந்து கொண்டே போனது. 2012-ன் படி, தேசிய அளவில் 79% அளவிற்கு நாட்டு மாடுகள் எண்ணிக்கை இருந்தாலும், தமிழகத்தில் வெறும் 28% மாடுகள் மட்டுமே நாட்டு மாடுகளாக உள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருந்த காலத்திலேயே (2007-2012) நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 35% குறைந்துபோனது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆக, ஜல்லிக்கட்டு நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக மாட்டினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி. என்னை பொருத்தவரை, ஜல்லிக்கட்டை விட நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டிய விசயமும் இதுவே. ஆனால், தங்களது சுயநலத்திற்காக திட்டம் போட்டு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒருசிலர், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - பீட்டாவுக்கு தடை என்றளவில் இதனை திசைமாற்றி கொண்டிருக்கிறார்கள்.  

எது பொய்? எது உண்மை? -  நாம் நினைப்பதை விட வேகமாக நாட்டு மாடுகள் அழிந்து கொண்டிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. வேலூர் பகுதியை சேர்ந்த ஆலம்பாடி என்ற இனம் நம் கண்முன்னே அழிந்ததே அதற்கு முக்கிய சான்று. ஆனால் இங்கே பொய் என்பது எதுவென்றால், ஜல்லிக்கட்டு நடத்திவிட்டால் நாட்டு மாடுகள் அனைத்தையும் காப்பாற்றி விடலாம் என்ற பரப்புரை. இன்னும் ஒருபடி மேலே சென்று மாடுகளை பற்றியே அறியாத தலைமுறையிடம் சென்று “Jallikattu is a Breeding Science” என்றெல்லாம் நகைப்புக்குரிய வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி எல்லாம் இந்த வகையினர் தான். ஆனால், இவற்றையெல்லாம் நீங்கள் பொதுதளத்திலோ, நேரடியாகவோ கேள்வி எழுப்பினால், அறிவார்ந்த சிந்தனைகளை தாண்டி உண்மைக்கு புறம்பான பதில்களே கிடைக்கும். அதற்கும் மேலே சென்றால், நீங்கள் ஆபாசமான வசவு சொற்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், இது தானே அவர்கள் கூறும் தமிழனின் மரபு..!

சரி, இப்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டு போராடி வருபவர்களது நோக்கம் என்னவாக இருக்கும்? அழிந்து வரும் நாட்டு மாடுகள் இனத்தை எப்படி காப்பாற்றலாம்? அடுத்த பதிவுகளில் காணலாம்.

- தொடரும்

3 கருத்துகள்:

  1. முட்டாள்தனமல்ல ஆனந்தம்.... எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டுக் காளைகளே....
    எப்படி நம் கண் முன்னே டிராக்டர்களும் மோட்டார் வாகனங்களும் உழவு மாடுகளையும் வண்டி மாடுகளையும் அழித்தனவோ அப்படியே,
    ஜல்லிக்கட்டு அழிந்தால் நம் தமிழ்நாட்டுக்காளை இனங்கள் அழிவது திண்ணம்..
    இதன்பின் உலக பெரும் தொழில் முதலைகளின் அரசியலும் உள்ளது என்பதும் உண்மை.
    உங்கள் எழுத்துத்திறமையை, உருவெடுத்திருக்கும் அவசியமான போரட்டத்தில் அரிதாகப் பங்கெடுக்கும் இளைஞர்களைத் திசைதிருப்பப் பயன்படுத்தாதீர். அது நீங்கள் நம் மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக பெருமுதலாளிகளின் அரசியல் என்பதெல்லாம் கட்டுக்கதை. மாடுகள் அழிகிறது என்பது சரியே. ஆனால் ஜல்லிக்கட்டு தாண்டியும் நாம் பேச வேண்டும். என்னுடைய கவலையெல்லாம் இளைஞர் சக்தியை பொய்யை கூறி வழிநடத்திச் செல்கின்றனர் என்பதுதான்.

      நீக்கு
  2. சிறப்பான ஆய்வு கட்டுரை! உண்மைக்கு இந்த நாட்டில் அல்ல, எல்லா இடங்களிலுமே பிழைப்பு கஷ்டமாகத்தான் இருக்கிறது. பொய் பெண்ணின் அழகு போல். சீக்கிரமாக பிடித்துப்போகும். ஆனால், நாள் பட நாள் பட காணாமல் போகும்! உண்மை புரியும் பொழுது, அதனால் பெரிய பிரயோசனம் இருக்காது. இருந்தாலும் ஜெய்ப்பது என்னவோ உண்மைதான்!

    பதிலளிநீக்கு