வியாழன், 13 டிசம்பர், 2018

சீமான் கமல் சந்திப்பு - பிளவுபடுகிறதா தமிழ்தேசிய அரசியல் மய்யம்?

[கோகுலம் கதிர்  மார்ச் மாத இதழில் சீமான் கமல் சந்திப்பு - பிளவுபடுகிறதா தமிழ்தேசிய அரசியல்? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம், நிச்சயமாக ஏனைய அரசியல் அறிமுகங்களை விட வித்தியாசம் தான். சால்வைகளின்றி மாலைகளின்றி திராவிடம் அரசியல் கூறும் சுயமரியாதையின் மாண்போடு நடைபெற்ற புதியதொரு அரசியல் மாநாடு. அந்த மாநாட்டைப் போலவே வித்தியாசமானது அதற்குமுன் நிகழ்ந்த கமலின் சந்திப்புகள். கலைஞர், நல்லக்கண்ணு போன்ற மிக மூத்த அரசியல்வாதிகளின் ஆசிகளோடு, கலையுலக சகாக்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ஆகியோரது வாழ்த்துக்களோடு தனது அரசியல் பயணத்தை துவங்கினார். ஆனால், இவற்றிற்கு முற்றிலும் விசித்திரமாக அமைந்தது நாம் தமிழர் கட்சியின் சீமானுடனான சந்திப்பு. அதிலும், இருவரும் இணைந்து அளித்த பேட்டியானது அன்றைய தினத்தில் இந்திய அளவில் அதிகம் பார்த்த காணொளியாக ‘ட்ரென்ட்’ ஆனது.

தமிழகத்தில் தொலைந்துபோன அரசியல் நாகரீகத்தை மீட்டெடுத்த நிகழ்வாக இதைக் கருதினாலும் கமலஹாசனின் வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்து வாழ்த்து கூறியது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சீமானை ஆதரிக்கும் தமிழ்தேசிய
கருத்தியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், பா.ம.க இராமதாஸ், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கமலை ஒருபுறம் ஒருமித்து எதிர்ப்பு தெரிவிக்க, அவரை வழியசென்று வரவேற்று வாழ்த்து தெரிவித்த ஒரே தலைவராய் சீமான் தெரிகிறார். கொள்கைகள், கோட்பாடுகள், பார்வைகள் என அனைத்து அம்சத்திலும் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் இருவரும் ஒருசேர பேட்டியளிப்பது கட்சி வருமுன்னரே கூட்டனியா என்று அரசியல் நோக்கர்களையும் சிந்திக்கவைத்துள்ளது.

புதிய அரசியல் பயணம் துவங்கும் கமலஹாசன், ஒரு நல்லென்ன அடிப்படையில் சந்தித்திருந்தாலும் கொள்கை அடிப்படையில் இருவருக்குமான ஒரே தொடர்பு தமிழுணர்வு மட்டுமே. தமிழ்தேசிய அரசியலை முன்னெடுப்பவர் சீமான் என்றால், திராவிட சித்தாந்தங்களை அடிப்படியாகக் கொண்டவர், கமல். அவர், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினால், இவர் தமிழன் என்பது அடையாளம் மட்டுமே, தகுதி இல்லை என்பார். மேடை பேச்சுகளிலும் கூட, எளிய தமிழில் ஆக்ரோஷமாக உரையாற்றும் சீமானும் ‘தெளிவாக குழப்பும்’ கமலும் முற்றிலும் மாறுபட்ட கோணம் தான். இந்த மாறுபட்ட பார்வைகள் கூட அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பட்டமாக காண முடிந்தது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் ஊழல் குறித்தும் சீமானது கருத்துக்களை மறுத்துப்பேச முடியாத சூழலில் இருப்பதாக கமலஹாசனின் உடல்மொழி தெளிவாகக் கூறியது.

சீமானை பொறுத்தவரை, தான் மதிக்கும் மிகப்பெரிய திரைக் கலைஞரது புதிய முயற்சியை வாழ்த்துக்கூற வந்ததாகவே கூறினார். அவர்மீது கொண்ட மரியாதையினால் தாமே வந்ததாக கூறியதும் ஏற்புடையதே. தொடர்ந்து, கமல் மண்ணின் மைந்தன் என்பதால் அவரது மாற்று அரசியல் முயற்சியை வரவேற்பதாக கூறினார், சீமான். இந்த கருத்துதான் அவர் மீதான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது எனலாம். முக்கியமாக, தமிழ்தேசிய ஆர்வலர்களை பொறுத்தவரை திராவிட கருத்தியலை முன்வைக்கும் கமலின் அரசியலை மாற்று அரசியல் என வரவேற்பது தவறானது என்கின்றனர். அவர் கூறியது போல, கமலின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அது மெல்ல மெல்ல வளர்ந்து வரும் தமிழ்தேசிய அரசியலுக்கு முடிவுரை எழுதிவிடும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

சுப.உதயகுமார் ஒரு ஊடக விவாதத்தில் ஒருபடி மேலே சென்று சீமான் தங்களை எல்லாம் ஏமாற்றிவிட்டார் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்குள்ளுமே இந்த எதிர்ப்புக் குரல் இருப்பது சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. எந்த திராவிடத்தை எதிர்த்து அரசியல் மேடை அமைத்தாரோ, இன்று அதையே வலிமையாக ஆதரிக்கும் கமலின் அரசியலை ஆதரிக்கிறாரோ என்ற குரல்கள் கட்சியினுள்ளே வெளிப்படுகிறது. நடிகர்கள் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு யாரும் அரசியல் களம் காண முடியாது என்று முழங்கிய சீமான், இன்று தனது கொள்கை என்னவென்று அறிவிக்காத கமலோடு அவசர கதியில் கரம்கோர்ப்பதா போன்ற எதிர்வினைகள் எழும்பியுள்ளது வியனரசு போன்ற கட்சியின் மூத்த தலைவர் இதனை ஊடகங்களிலேயே வெளிப்படையாக இந்த சந்திப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளது கட்சியின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுவதாக அமைகிறது.
தமிழ்தேசிய அரசியலை பொறுத்தவரை, பன்னெடுங்காலமாக இந்த கருத்தியல் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒற்றுமையின்மை காரணமாக வலுவான குரலாக அது இருந்ததில்லை. தற்போதும் கூட சீமான், திருமுருகன் காந்தி என இருவேறு பாதையாக தமிழ்தேசிய கருத்தியல் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், அரசியல் அரங்கில் அதன் ஒற்றை முகமாக வலுவாக அறியப்படுகிறார் சீமான். ஆனால் கமல் மீதான சீமானின் தற்போதைய இந்த ஆதரவு நிலைப்பாடு, அவரோடு பயணிக்கும் ஏனைய தமிழ்தேசிய அமைப்புகளை அவரிடமிருந்து விலகியிருக்கவும் செய்யலாம். இதன் முடிவு அரசியல் அரங்கில் மீண்டும் தமிழ்தேசிய அரசியல் வலிமையிழக்கவும் செய்யலாம். ஒருவேளை ஒத்த கருத்து இல்லாவிடினும் தேர்தல் நோக்கில் கூட்டணிக்கு அச்சாரமிட்டால், கொள்கைகளால் சீமான் பின் சேர்ந்த இளைஞர் கூட்டத்தின் பெரும் ஆதரவினை இழக்க நேரிடும் என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும்.

எது எப்படியாகினும் அமைதியாய் இருந்த தேன்கூட்டை கல்லெறிந்தவன் நிலைபோல, சீமான் பல முனைகளிலும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார். இது வெறும் அரசியல் நாகரீகமா அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா என்பதை கமலின் அரசியல் நகர்வுகளுக்கு சீமான் காட்டும் எதிர்வினைகளே தெளிவாக்கும். அதுவரை நாமும் பொறுத்திருப்போம்.

ஆனந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக