புதன், 6 பிப்ரவரி, 2019

சாதிக்குமா தன்னாட்சி கூட்டணி?

[கோகுலம் கதிர் பிப்ரவரி மாத இதழில் சாதிக்குமா தன்னாட்சி கூட்டணி? என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்]

தேர்தல் வரும்போதெல்லாம் விதவிதமான பல சுவாரசியங்களை அரசியல் களத்தில் காண முடியும். அப்படியான ஒரு நிகழ்வு தான் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ மாநாடு.


லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருக்க, 20க்கும் மேற்பட்ட தேசிய, மாநில கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களின் பங்கேற்பில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜீ ஒருங்கிணைப்பில், இந்தியாவின் கிழக்கு வாசலில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட சங்கமம் அது. ஒரு முன்னாள் பிரதமர், மூன்று முதலமைச்சர்கள், மூன்று முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் போன்ற இளம் தலைவர்கள், காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது, பாஜகவைச் சேர்ந்த முதுபெரும் தலைவர்களான அருண் ஷோரி மற்றும் யஸ்வந்த் சின்ஹா, பாராளுமன்ற உறுப்பினர் சத்ருக்கன் சின்ஹா ஆகியோரும் எதிர்கட்சியினரோடு கைகோர்த்து நின்றது அரசியல் அரங்கில் சற்று வியப்புக்குரியதே.

ஒவ்வொரு தலைவர்களும், பணமதிப்பிழப்பு, மதவாதம், விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பு, மாநிலங்கள் உரிமை, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு, வாக்கு இயந்திரம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பாஜகவையும் பிரதமர் மோடியையும் சாடினர். குறிப்பாக இம்மாதிரியான கூட்டணி அரசியலில் அனுபவம் வாய்ந்த தேவகௌடா, சரத் பவார், சரத் யாதவ், யஸ்வந்த் சின்ஹா போன்றோர் கூட்டணியின் நோக்கமும் அதற்கான அணுகுமுறையும் முன்வைத்தனர். பாஜகவுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் ஓரணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே அனைவரது சாராம்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள தனிப்பெரும்பான்மை அரசை வீழ்த்துவது ‘மகாகத்பந்தன்’ என்றழைக்கப்படும் மெகா கூட்டணி மூலமே சாத்தியம் என்பதை அவர்களது பேச்சு வெளிப்படுத்தியது.

இந்திய அரசியலில் மெகா கூட்டணிகள் ஒன்றும் புதுமையானவை அல்ல. வலிமையான இந்திரா காங்கிரசை வீழ்த்த 1977-ல் உதயமான ஜனதா கூட்டணி துவங்கி தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி போட்டு ஆளுங்கட்சியை தோற்கடிக்கும் உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு, பிரதான தேசிய கட்சிகளே மாநில அளவிலான கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. சில சமயங்களில் பெரும்பான்மை இலக்கை எட்டுவதற்காக, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் கூட உருவாக்கப்பட்டது. குறிப்பாக, 1991-ல் வலுவான தேசிய கட்சியாக பாரதீய ஜனதா உருவெடுத்த பின்னர், காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளை ஒட்டிய கூட்டணிகளாக உருவாகி, இருகட்சி தேர்தல்முறைப் போலானது. இடையில் இரண்டு முறை மூன்றாம் அணிகள் ஆட்சியமைத்தாலும் அவை காங்கிரஸ் அல்லது பாஜகவின் துணையுடன் அமைந்த நிலையற்ற ஆட்சியாகவே அமைந்தது.

அரசியல் சாசனப்படி இந்தியாவில் பலகட்சி ஆட்சிமுறை தான் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலும் ஏதேனும் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே நடைபெறுகிறது. இருப்பினும், பிரதான கட்சிகளை சாராமல் சிறு தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து அமைக்கும் மூன்றாம் அணி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. ஒரே எதிரிகள், ஒரே நோக்கம் உள்ளிட்ட காரணங்களோடு கரம்கோர்க்கும் மூன்றாம் அணிகள் பெரும்பாலும் உருவாகும் முன்னரே உடைந்து போன வரலாறுகள் தான் அதிகம். அதையும் தாண்டி தேர்தலை எதிர்கொண்டு, போதிய ஆதரவுடன் ஆட்சியமைப்பது யாவும் இப்போதும் குதிரைக்கொம்பே. தத்தமது மாநிலங்களில் கூட தனித்து வெல்லும் அளவிற்கு பலம்வாய்ந்த மாநில கட்சிகள் அமைக்கும் இக்கூட்டணிகள் கூட பின்னடைவை சந்திக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், தொகுதி பங்கீடு குழப்பங்கள், நாற்காலி ஆசைகள், முரண்பாடான கொள்கைகள், வலுவற்ற தேசிய தலைவர்கள் போன்றவை, பலமான கட்சிகளை கொண்ட ஒரு நம்பிக்கையற்ற கூட்டணியையே உருவாக்குமென அறிய முடிகிறது.


தற்போதைய மம்தாவின் கூட்டணி முயற்சி கூட காங்கிரசை உள்ளடக்கிய எதிர்கட்சிகளின் கூட்டணியா அல்லது மாநில கட்சிகள் மட்டுமே மூன்றாம் அணியா என்ற குழப்பம் மாநாட்டிற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஏனெனில், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே காங்கிரஸ் மற்றும் பிஜேபி அல்லாத மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்ற கொள்கையை முன்வைத்து, அனைத்து மாநில கட்சிகளையும் தொடர்புகொண்டு வந்தார். மேலும், ‘தன்னாட்சி முன்னணி’ என்ற மூன்றாம் அணியாக அது செயல்படும் என்றும், அதற்காக 1:1 என்றொரு செயல்திட்டத்தையும் முன்வைத்தார். இதனை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்று தமது முழு ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான், மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டதும் நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ் ஆகியோர் புறக்கணித்ததும், அக்கூட்டணியின் ஆரம்பமே குழப்பமாய் இருப்பதை வெளிப்படையாக்குகிறது.

கூடவே, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் சார்பில் அதன் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் மாயாவதி கலந்துகொள்ளாது தத்தம் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்ததும் இங்கே கவனிக்க வேண்டியதாய் அமைகிறது. காங்கிரசை பொருத்தமட்டில் கூட்டணி ஆட்சியே சாத்தியக்கூறு என்ற முடிவுக்கு வந்து வெகுநாளாகிவிட்டது. ஆகையால் முடிந்த அளவிற்கு, கூட்டணி பலத்தை பெருக்க செயல்பட்டு வருகிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாக அறிவிக்காவிடினும், அதை நோக்கியே நகர்வதாக கணிக்க முடிகிறது. இன்னொரு பக்கம், எதிரெதிராக இருந்த மாயாவதி - அகிலேஷ் யாதவின் திடீர் கூட்டணி உத்திர பிரதேச அரசியல் மட்டுமல்லாது மத்தியிலும் தொடருமென நம்பப்படுகிறது. கூடவே மாயாவதியின் பிரதமர் ஆசையும் ஏற்கனவே குழம்பியுள்ள எதிர்க்கட்சி கூட்டணியில் மேலும் குழப்பமாக அமைகிறது.

வாக்கு சதவீத அடிப்படையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியே இந்தியாவின் மூன்றாம் பெரிய கட்சியாகிறது. ஆனால், எம்பிக்கள் எண்ணிக்கையில் பார்த்தால் தனித்து போட்டியிட்ட அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகியவை மொத்தமாக காங்கிரஸ் கூட்டணியை விட கூடுதல் எண்ணிக்கையில் உள்ளது. மம்தா முன்வைத்த மூன்றாம் கூட்டணிக்கு வலுவான நம்பிக்கையும் இதுதான். தேசிய கட்சிகளின் கூட்டணியாக மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த காலம் போய், மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் வந்து சேரட்டும் என்பதே மம்தாவின் மாநாட்டின் மறைபொருளாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. டெல்லியிலிருந்து கூட்டணி துவங்கி மாநிலங்களுக்கு செல்லும் நிகழ்வை மாற்றி, கொல்கத்தாவில் இருந்து கூட்டணிக்கான அழைப்பு விடுத்து அதற்கு பிற மாநிலங்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களையும் பங்கேற்க வைத்தது மம்தாவின் முதல் வெற்றியாக கூட எடுத்துக்கொள்ளலாம்.


ஒப்பீட்டு அளவில் 1989 முதலே நாடாளுமன்றத்தில் தேசிய கட்சிகள் தங்களது பிடிகளை மெல்ல மெல்ல இழந்து, மாநில கட்சிகளின் பலம் அதிகரித்து வருவதை காண முடிகிறது. உதாரணத்திற்கு, 1989-ம் ஆண்டு 8 தேசிய கட்சிகளும் 17 மாநில கட்சிகளும் பங்கேற்ற நாடாளுமன்றத்தில் 2014-ம் ஆண்டு தேர்தலின் படி 5 தேசிய கட்சிகளும் 22 கட்சிகளும் அங்கம் வகிக்கிறது. அதிகபட்சமாக 1998 முதல் 2009 வரையிலும், 30-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் பாராளுமன்றத்தில் அங்கமாய் இருந்தன. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 1989-ல், 471 தேசிய கட்சிகள் வசமும், 46 மாநில கட்சி பிரதிநிதிகளாகவும் இருந்தனர். அதுவே தற்போது 16வது மக்களவையில் 342 தேசிய கட்சியினராகவும், 176 பேர் மாநிலக் கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். வாக்கு சதவீத அடிப்படையிலும் தேசிய கட்சிகளின் வாக்குகள் முறையே 73.3%-ல் இருந்து 60.7% ஆக சரிந்துள்ளது. இதனடிப்படையில், மாநில கட்சிகள் மட்டுமே அமைந்த கூட்டணி ஒன்று பெரும்பான்மை இலக்கை எட்டி ஆட்சியை பிடிக்கலாம் எனும் மம்தாவின் கணக்கு சாத்தியமானதே.

உண்மையில் கூட்டணியின் வெற்றியை புள்ளிவிவரங்களால் மட்டுமே உறுதி செய்ய முடியாது. வலிமையான தலைவர்கள், பொதுவான கொள்கை உடன்பாடு, முக்கியமாக பொதுவான பிரதமர் வேட்பாளர் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் காரணிகளே வெற்றிகரமான கூட்டணியை நிர்ணயிக்கும். 1989-ல் ஆட்சியமைத்த தேசிய முன்னணியும், 1996-ல் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி அணியும் வலிமையான தலைவர்களும் போதிய வாக்கு சதவீதமும் பெற்றிருந்தாலும் கொள்கை முரண்பாடுகளும் பதவி சண்டைகளும் மக்களுக்கு மூன்றாம் அணிகள் மீதான நம்பிக்கையை தகர்த்தது. ஜனதாக்கட்சி ஆட்சியையும் சேர்த்து கணக்கிட்டால், மொத்தமாக 6 ஆண்டுகால ஆட்சியில் 6 பிரதமர்களை கண்டது கூட்டணி அரசியலின் பலவீனத்தை குறிக்கும். இதனை மம்தா கணக்கிட்டாரா என்பதை அறிய முடியாது, ஆனால் அடுத்து பேசிய தேவகௌடாவும் சரத் பவாரும் நன்கு அறிவர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தன்னாட்சி கூட்டணி வெற்றிபெறுமா என்பதை இப்போது கணிக்க முடியாமல் போனாலும், தன்னாட்சி பேசும் மாநில கட்சிகளின் குரல்கள் பாராளுமன்றத்தில் கனத்து கேட்கும் நாட்கள் வெகு தூரமில்லை என்பதே நிதர்சனம். முக்கியமாக, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததுள்ள பாஜகவின் மையப்படுத்தும் அரசாங்கம், மாநில அரசுகளை தன்னாட்சிக்கும் கூட்டணி அரசியலுக்கும் நகர்த்திக் கொண்டுவருவதை காண முடிகிறது.

இறுதியாக, நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல பாஜக பலம்வாய்ந்த கட்சியாக இருப்பதால், பல கட்சிகள் சேர்ந்து எதிர்க்கின்றது. ஆனால், நேருவுக்கு பிறகு தனிபெரும்பான்மை பெற்ற எந்த கட்சியும் இரண்டாம் முறை ஆட்சியை பிடித்ததில்லை; மாறாக கூட்டணி அரசுகளே அடுத்த முறை ஆட்சியமைக்கும் என்கிறது இந்திய அரசியல் வரலாறு. அப்படியெனில் சரியான பாதையை நோக்கித் தான் மம்தா பயணிக்கிறார் எனலாம். ஆனால் வெற்றியும் தோல்வியும் தேர்தல் முடிவுகள் அன்றே புலப்படும்; அதுவரை முயற்சியை கைவிடாமல் முன்னேறுவாரா மம்தா பானர்ஜீ என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். கூடுதலாக, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி எனும் அண்ணாவின் முழக்கம் தேசிய நீரோட்டத்தில் வழுப்பெற இந்த ‘ஒருங்கிணைந்த இந்தியா’ மாநாடு துவக்கமாக அமையலாம். அமைந்தால் மட்டுமே அன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய ‘ஜனநாயகத்தை காப்போம்; தேசத்தை காப்போம்’ எனும் கோசம் முழுமை பெரும்.

- ஆனந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக